2016-10-14 16:10:00

தாய்லாந்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் இரங்கல்


அக்.14,2016. 1946ம் ஆண்டு முதல் தாய்லாந்து மன்னராக விளங்கிய மன்னர் பூமிபோல் அவர்களின் இறப்பை முன்னிட்டு, தாய்லாந்து கத்தோலிக்க ஆயர் பேரவையும், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான பாங்காக் கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மிகப்பெரிய மன்னராக விளங்கிய இவர், நாட்டுக்காக ஆற்றிய சேவைகளை நன்றியுடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

மன்னர் பூமிபோல் அவர்கள், புத்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், அந்நாட்டில், மற்ற மதங்களையும் பாதுகாப்பவராக இருந்தார் என்றும், இவர் தாய்லாந்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார் என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.

மன்னர் பூமிபோல் அவர்கள், 1960ம் ஆண்டில், வத்திக்கானில், புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்களைச் சந்தித்து, தனது நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1984ம் ஆண்டில், தாய்லாந்துக்கு, திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார்.

மன்னர் பூமிபோல் அவர்களின் தன்னிறைவு பொருளாதாரக் கொள்கைக்காக, அவர், 2006ம் ஆண்டில், ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட அமைப்பின் விருதைப் பெற்றுள்ளார். மூவாயிரத்திற்கு மேற்பட்ட, வெள்ளக் கட்டுப்பாடு திட்டம், குடியிருப்பு, பயிடுதல் மற்றும் மழை பெய்வதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளார்.

தாய்லாந்து மன்னருக்கு சட்டரீதியாக அதிகாரம் இல்லாமல் இருந்தாலும், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால், கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக நீடித்து வந்தார் மன்னர் பூமிபோல். இவருக்குப் பின்னர், தாய்லாந்து மன்னராக, அவரது மகன் மகா வஜ்ஜிரலாங்கோன் பதவியேற்பார் என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், மன்னர் பூமிபோல் மறைவுக்கு ஓராண்டு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில், 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் புத்த மதத்தினர்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.