2016-10-13 16:08:00

முதலாம் பர்த்தலோமேயு பற்றி திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


அக்.13,2016. பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மன் என்ற பல ஐரோப்பிய மொழிகளிலும், இலத்தீன் மொழியிலும் புலமைத்துவம் பெற்ற முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களை, 2002ம் ஆண்டு தான் முதன் முதலாகச் சந்தித்த அனுபவம் குறித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் ஒரு நூலில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், தன் தலைமைப் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, "திருத்தூதரும் தொலைநோக்கு கொண்டவருமான பர்த்தலோமேயு" என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள ஒரு நூலில், "பயணிக்கும் தோழர்" என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.

2002ம் ஆண்டு, அசிசி நகரில் இடம்பெற்ற பல்சமய வழிபாட்டில் கலந்துகொள்ள, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களுடன் தான் பயணித்த வேளையில், அதே இரயில் பெட்டியில் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கட்டுரையில் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்தப் பயணம் துவங்கி, பல ஆண்டுகள், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுடன் தான் மேற்கொண்ட பல்வேறு ஒன்றிப்பு பயணங்களை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.