2016-10-13 16:03:00

முதலாம் பர்த்தலோமேயு நூலுக்கு திருத்தந்தையின் அணிந்துரை


அக்.13,2016. நான் என் தலைமைப்பணியைத் துவக்கிய நாளன்றே, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களை சந்தித்தேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலின் அணிந்துரையில் எழுதியுள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், தன் தலைமைப் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, "திருத்தூதரும் தொலைநோக்கு கொண்டவருமான பர்த்தலோமேயு" என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள ஒரு நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். 

"பொதுவான பாதை" என்ற தலைப்பில் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அணிந்துரையில், தன் முதல் சந்திப்பிலேயே, நம்பிக்கையின் அடிப்படையில் (காண்க. 2 கொரிந்தியர் 5:7)  வாழும் ஒரு மனிதரை தான் சந்தித்ததாக திருத்தந்தை கூறியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக வெளிப்படையான தொடர்புகள் ஏதுமின்றி அமைதியில் இருந்தாலும், உரோம் நகர் திருஅவைக்கும், கான்ஸ்டான்டிநோபிள் திருஅவைக்கும் இடையே இருந்த உறவு மிக ஆழமானது என்று கூறியுள்ள திருத்தந்தை, முதலாம் அத்தனகோரஸ் அவர்களுக்கும், அருளாளர் ஆறாம் பவுல் அவர்களுக்கும் இடையே இந்த உறவு மீண்டும் புத்துயிர் பெற்றதையும் தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.   

கத்தோலிக்கத் திருஅவையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் இணைந்து இரு அறிக்கைகளில் கையெழுத்திடுவதற்கு, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், முக்கியமான தூண்டுதலாக இருந்தார் என்பதை, தன் அணிந்துரையில் திருத்தந்தை நினைவுகூர்ந்துள்ளார்.

காயப்பட்ட மனுக்குலம், காயப்பட்ட பூமி இவற்றின் மீது முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், கொண்டுள்ள ஈடுபாடு குறித்து, திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், தன் 25வது ஆண்டு பணிவாழ்வை சிறப்பிக்கும் வேளையில், இறைவனுக்கு நன்றி கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்தோரான பேதுரு, யாக்கோபு ஆகியோரின் பரிந்துரையால், இறைவன் அவரை வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுதலோடு, தன் அணிந்துரையை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.