2016-10-13 15:54:00

"இறைவனுக்குச் சொந்தமான மக்களின்" பண்புகள் - திருத்தந்தை


அக்.13,2016. இறைவனிடம் மன்னிப்பு பெறவேண்டும் என்ற தேவையை உணர்ந்து, அவரைச் சந்திக்க செல்பவரே, கிறிஸ்தவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை ஆற்றிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், திருத்தூதர் புனித பவுல், எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் "இறைவனுக்குச் சொந்தமான மக்களுக்குரிய" பண்புகளை விளக்கியிருப்பதை, தன் மறையுரையின் மையக்கருத்தாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

இறைவன் நம்மை ஒரு கூட்டமாக அழைக்கவில்லை, மாறாக, தனித்தனியே பெயரிட்டு அழைத்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, தன்னை அழைத்த இறைவனோடு ஒன்றிப்பு கொள்ளாமல், ஒரு கூட்டத்துடன் இணைய விரும்புவது, ஒரு கால்பந்தாட்டக் குழுவின் இரசிகர்கள் கூட்டம் போன்ற உணர்வைத் தரும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

பிறக்கப்போகும் குழந்தையைக் குறித்து தாயும், தந்தையும் பல்வேறு கனவுகள் கொண்டிருப்பதைப்போல், விண்ணகத் தந்தையும் நம் ஒவ்வொருவரைக் குறித்தும் கனவுகள் கண்டு, நம்மை அழைத்துள்ளார் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

இந்தக் கனவுகளை நாம் நிறைவேற்றாதபோது, தந்தையின் மன்னிப்பைத் தேடிச் செல்கிறோம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறைவனின் மன்னிப்பை பெற்றுள்ளோம் என்ற நம்பிக்கை கொள்வதும், கிறிஸ்தவரின் முக்கிய பண்பு என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.