2016-10-13 16:28:00

அலெப்போவில் மனிதாபிமான பேரிடரில் சிக்கியுள்ள குழந்தைகள்


அக்.13,2016. ஒரு இலட்சம் குழந்தைகள் உட்பட, சிரியாவின் அலெப்போ நகரில் சிக்கியிருக்கும் 2,75,000 மக்கள், மனிதாபிமான பேரிடரைச் சந்தித்து வருகின்றனர் என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர், மைக்கில் ராய் அவர்கள் கூறியுள்ளார்.

கண்மூடித்தனமாக அங்கு நிகழும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அம்மக்களுக்கு உதவிகள் சென்று சேரவேண்டும் என்று காரித்தாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அலெப்போ நகரில் உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லையென்றும், மருத்துவமனைகளும் பெருமளவில் பாழடைந்துள்ளதால், மருத்துவ உதவிகள் இன்றி பலர் இறந்து வருகின்றனர் என்றும், காரித்தாஸ் செயலர் ராய் அவர்கள் கூறியுள்ளார்.

அலெப்போ நகரில் பணியாற்றிவந்த மருத்துவர்களில் 95 விழுக்காட்டினர், காயமுற்று, சிறைப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அல்லது, அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்றும், அங்கு இயங்கிவந்த 33 மருத்துவமனைகளில் தற்போது 10 மருத்துவமனைகளே மிகக் குறைந்த வசதிகளுடன் இயங்கி வருகின்றன என்றும் காரித்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.