2016-10-12 15:41:00

புறக்கணிப்பு உலகில் இரக்கச் செயல்களே மாற்று மருந்து


அக்.12,2016. அன்பு இதயங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இப்புதன் பொது மறைக்கல்வியுரையைக் கேட்பதற்காக, குளிரையும் பொருட்படுத்தாமல், நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், வத்திக்கான் வளாகத்தை நிறைத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல, கதிரவனின் ஒளிக்கதிர்களும் பளிச்சென வீசின. முதலில், இப்புதன் காலை ஒன்பது மணிக்கு, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, “உலக கிறிஸ்தவ சபைகள் ஒன்றிப்பு அவை” நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்குப் பொறுப்பான முப்பது பேரைச் சந்தித்தார் திருத்தந்தை. அநீதி, போர் போன்றவைகளால் இக்காலத்தில் துன்புறும் எண்ணற்ற மக்களுக்கு, கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும். மேலும், உலகில், பயங்கரவாதிகள் மற்றும் சக்திவாய்ந்த அதிகாரங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களை அல்லது கிறிஸ்தவர்களை துன்புறுத்தும்போது, அவர்களை, எக்கிறிஸ்தவ சபையினர் என்று கேட்பதில்லை. துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. பின்னர், காலை 9.20 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு வந்து, அங்குக் கூடியிருந்த, நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களிடம், உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்கள் பற்றி, மறைக்கல்வி வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைவனின் இரக்கம் பற்றிச் சிந்தித்து வருகிறோம். குறிப்பாக, இறைமகன் இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இரக்கம் மற்றும், இயேசுவைப் பின்செல்பவர்களாக, இறைத்தந்தையைப் போல், நாமும் வாழ வேண்டிய நம் கடமை பற்றிச் சிந்தித்து வருகிறோம். மிகச் சிறியோராகிய நம் சகோதர, சகோதரிகளில்(மத்.25,40) பிரசன்னமாக இருக்கும் இயேசுவுக்கு, நாம் காட்டும் இரக்கத்தை வைத்தே நாம் தீர்ப்பிடப்படுவோம் என்று, புனித மத்தேயு நற்செய்தியில், ஆண்டவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். இயேசுவின் சொற்கள், ஏழு பாரம்பரிய, உடல் சார்ந்த இரக்கச் செயல்களைத் தூண்டியுள்ளன. பசியாய் இருப்பவர்க்கு உணவளித்தல், தாகமாய் இருப்பவரின் தாகம் தணித்தல், ஆடையின்றி இருப்பவர்க்கு ஆடை கொடுத்தல், அந்நியரை வரவேற்றல், நோயாளரைக் குணமாக்குதல், கைதிகளைச் சந்தித்தல், இறந்தோரை அடக்கம் செய்தல் ஆகியவை, ஏழு, உடல் சார்ந்த இரக்கச் செயல்களாகும். திருஅவையின் பாரம்பரியம், ஏழு ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களையும் சேர்த்துள்ளது. அதாவது, சந்தேகத்தில் இருப்பவர்க்கு ஆலோசனைக் கூறுதல், அறியாமையில் உள்ளவர்க்கு கற்பித்தல், பாவிகளை நன்னெறிப்படுத்துதல், துயருற்றோருக்கு ஆறுதல் அளித்தல்,  குற்றங்களை மன்னித்தல், நமக்குத் தீங்கு செய்தோரைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுதல்,  வாழ்வோருக்காகவும், இறந்தோருக்காகவும் செபித்தல் ஆகியவை ஆன்மீகம் சார்ந்த ஏழு இரக்கச் செயல்கள் ஆகும். விசுவாசத்தை வாழ்வதன் வெளிப்பாடாக, இந்த இரக்கச் செயல்கள், ஆரவாரமின்றியும், எளிமையான அடையாளங்களாலும் அடிக்கடி ஆற்றப்படுகின்றன. ஆயினும், கொல்கத்தா அன்னை தெரேசா போன்ற புனிதர்கள், கிறிஸ்துவின் இரக்கமுள்ள முகத்தை நமக்குக் காட்டியிருக்கின்றனர். அதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களால், நம்மைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தையும் மாற்ற முடிந்தது. எனவே, உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கச் செயல்களை எப்போதும் நம் மனதில் வைத்து, அவற்றை ஒவ்வொரு நாளும் செய்வதற்கு முயற்சிப்போம். புறக்கணிப்புக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், இரக்கச் செயல்களே, சிறந்த மாற்று மருந்து.      

இவ்வாறு இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான் உட்பட, பல நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். பின்னர், சிரியாவில், மனிதாபிமானமற்ற சண்டையில் ஈடுபட்டுள்ள எல்லாரும், உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்படுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், அக்டோபர் 13, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் உலக இயற்கைப் பேரிடர் குறைப்பு தினத்தைக் குறிப்பிட்டு, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரின் ஒன்றிணைந்த முயற்சிக்கு விண்ணப்பித்தார். மேலும், Scholas occurrentes அமைப்பினால் ஊக்குவிக்கப்படும், நட்பு முறையிலான, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்தார். பின்னர், பயணிகள் எல்லாருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.