2016-10-12 16:10:00

உங்கள் இயேசு, என் இயேசு என்ற பாகுபாடுகள் இல்லை-திருத்தந்தை


அக்.12,2016. கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற முயற்சியில், இயேசுவுடனும், ஒருவர் ஒருவருடனும் நாம் நடந்து செல்கிறோம் என்பதை நாம் நம்புகிறோமா என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஆங்கிலிக்கன், பாப்டிஸ்ட், லூத்தரன், மெதடிஸ்ட் என்ற பல கிறிஸ்தவ சபைகள் இணைந்து உருவாக்கியுள்ள உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் பொறுப்பாளர்களை, இப்புதன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுடன் மனம் திறந்த ஓர் உரையாடலை மேற்கொண்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்றதும், அது, இறையியல் அறிஞர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பணி என்று எண்ணிவிடக் கூடாது என்று கூறியத் திருத்தந்தை, நாம் இயேசுவுடன் இணைந்து நடக்கும்போது, அங்கு, உங்கள் இயேசு, என் இயேசு என்ற பாகுபாடுகள் இல்லை, மாறாக, நம் இயேசுவுடன் நாம் நடக்கிறோம் என்பதை உணரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறையியல் கருத்துக்களில் ஒன்றிப்பு உருவாக, இறையியல் அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொள்ளும் வேளையில், ஒன்று கூடி செபித்தல், ஒன்றாக பிறரன்பு, நீதிப் பணிகளில் ஈடுபடுதல் என்ற முயற்சிகள், நம்மிடையே நிகழ்வதை யாரும் தடுக்கமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரதிநிதிகளிடம் கூறினார்.

இன்றைய உலகில் நாம் சந்திக்கும் ஒரு முக்கியமான ஒன்றிப்பு, இரத்த ஒன்றிப்பு என்று கூறியத் திருத்தந்தை, லிபியா கடற்கரையில் கொல்லப்பட்ட காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை இளையோர் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை சிறப்பாக நினைவு கூர்ந்தார்.

கிறிஸ்துவின் பெயரைத் தாங்கியுள்ள பலர், இந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படுவது, நம்மிடையே இரத்தத்தின் ஒன்றிப்பை உருவாக்குகிறது என்று உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.