2016-10-12 15:57:00

இரக்கத்தின் தூதர்கள் : இரக்கச் செயல்களின் பாதுகாவலர்


அக்.12,2016. இரக்கச் செயல்கள், தன்னார்வலர்கள், மருத்துவமனைகள், தொழுநோயாளர், கைதிகள், குதிரைகள் எனப் பலரின் பாதுகாவலராகப் போற்றப்படுபவர் புனித வின்சென்ட் தெ பவுல். இவர், 1581ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Pouy என்ற கிராமத்தில், ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பிரான்சிஸ்கன் சபையினரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றபோது, இவரது திறமையைக் கண்ட ஒரு செல்வந்தக் குடும்பம், இவரை, தனது பிள்ளைகளுக்கு ஆசிரியராக நியமித்தது. துலுஸ் நகரில், இந்த ஆசிரியப் பணியில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கும் உதவியதோடு, துலுஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்கவும் இவர் பயன்படுத்தினார். ஏழைகள்மீது இவர் கொண்டிருந்த அன்பைப் புரிந்துகொண்ட அந்தக் குடும்பத் தலைவி, தனது உடைமைகள் அனைத்தையும் புனித வின்சென்ட் பெயருக்கு எழுதி வைத்தார். இந்த உதவியைப் பெற்றதும், நல்ல செயல்களுக்காகப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று எண்ணினார் இவர். 1600ம் ஆண்டில் தனது 19வது வயதில் அருள்பணியாளராகி, துலுஸ் நகரில், 1605ம் ஆண்டுவரை இவர் மறைப்பணியாற்றினார்.

1605ம் ஆண்டில், இவர், Marseilles நகரிலிருந்து Narbone நகருக்கு, கடல் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது இவர், கடல் கொள்ளையர்களால் கைதுசெய்யப்பட்டு Tunisக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடிமையாக விற்கப்பட்டார். முதலில், இவரை மீனவர் ஒருவர் வாங்கி, அதிகமாக வேலை கொடுத்து வாட்டி வதைத்தார். பின்னர், மந்திரவாதி ஒருவர் இவரை விலைக்கு வாங்கினார். மீண்டும் அடிமைச் சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட்ட புனித வின்சென்ட், கிறிஸ்தவத்தைத் துறந்த முஸ்லிம் ஒருவரால் வாங்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சென்று, புனித வின்சென்ட்டும், அவரது முதலாளியும் தப்பித்து, பிரான்சுக்குத் திரும்பினர். புனித வின்சென்ட், அவிஞ்ஞோனுக்கும், பின்னர் உரோமைக்கும் சென்று தனது கல்வியைத் தொடர்ந்தார். Goigny உயர்குடிமகனிடம் ஆன்மீக அருள்பணியாளராக இருந்தபோது, தகுதியான ஏழைகளுக்குப் பணம் விநியோகிக்கும் பணி இவருக்குக் கொடுக்கப்பட்டது. Clichy என்ற ஊரில் சிறிய பங்கில், சிறிது காலத்திற்குப் பங்குக் குருவாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் இவர் பணியாற்றினார். மாணவ மாணவியருக்கு மாலையில் கல்வி கற்பித்தார். சேரிகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் வாழ்ந்த மக்களைச் சென்று சந்தித்தார். தன்னால் இயன்ற அளவு உதவிகளையும் செய்தார். இதிலிருந்து இவர், நற்செய்தி அறிவிக்கவும், ஏழைகளின் துயரங்களை அகற்றவும் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

புனித வின்சென்ட், ஏழைகளுக்கென மருத்துவமனைகளைத் தொடங்கினார். இந்தப் பணி இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே தனது பணியை விரிவுபடுத்தினார். குற்றவாளிகள், கைதிகள் மீது அக்கறை கொண்டு, அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். இப்பணிக்கு உதவியாக, பிறரன்பு பெண்கள் சபை ஒன்றையும், ஆண்களுக்கென ஒரு சபையையும் ஆரம்பித்தார். இச்சபைகள் தற்போது, பொதுவாக, Vincentians என அழைக்கப்படுகின்றன. இவர் இச்சபைகளை ஆரம்பித்த காலத்தில், பிரான்சில் போதுமான அருள்பணியாளர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், அவர்கள், தங்கள் வாழ்வுக்கு விசுவாசமாக இல்லை. அருள்பணியாளர்கள் தாங்கள் தேர்ந்துகொண்ட வாழ்வுக்கேற்ப வாழ்வதற்கு இவர் உதவினார். அருள்பணியாளர்கள் வாழ்வில், சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். முதலில் அருள்பணியாளர்களுக்குத் தியானங்கள் கொடுத்தார். பின்னர், பொதுநிலை விசுவாசிகளுக்கும் தியானங்கள் கொடுத்தார் புனித வின்சென்ட். இவர், தனது வாழ்வின் இறுதி 23 ஆண்டுகளில், இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களில் கிறிஸ்தவ உணர்வைத் தூண்டினார். இவரின் போதனைகள் மக்கள் பலரை மனம் மாற்றின.

1618ம் ஆண்டில் பிரான்சில் புனித பிரான்சிஸ் சலேசியாரை, புனித வின்சென்ட் சந்தித்தார். இருவரும் நண்பர்களாயினர். 1622ம் ஆண்டில், பிரான்சிஸ் சலேசியார் இறந்ததும், அவர் நடத்திவந்த, சந்திப்பு அருள்சகோதரிகள் சபைப் பொறுப்பையும் புனித வின்சென்ட் ஏற்றார். கப்பலில் கொண்டுவரப்பட்ட அடிமைகள், ஏழைகள், ஆதரவற்றவர் போன்றோர்க்கு உதவிகள் செய்தார் புனித வின்சென்ட். ஏறக்குறைய நான்காயிரம் Vincentians 86 நாடுகளில் தற்போது பணியாற்றுகின்றனர். அதோடு, 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட அருள்சகோதரிகள், 94 நாடுகளில், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இவர் தனது வாழ்நாளில், முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருக்கிறார். இவற்றில், ஏறக்குறைய ஏழாயிரம், 18ம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்டன என்று அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. பிறரன்புக் கழகங்களுக்குப் பாதுகாவலரான இவரின் விழா செப்டம்பர் 27. இப்புனிதரின் பரிந்துரையால், ஓர் அருள்சகோதரி குடல்புண்ணிலிருந்து குணமானார். வாத நோயிலிருந்து ஒரு பெண் குணமானார். இவையே, இவர், 1729ம் ஆண்டில் அருளாளராகவும், 1737ம் ஆண்டில் புனிதராகவும் உயர்த்தப்பட உதவின. புனித வின்சென்ட் தெ பவுல், "பிறரன்பின் திருத்தூதர்", "ஏழைகளின் தந்தை" என அழைக்கப்படுகிறார். பெரும்போரில் வெற்றி பெறுவதால் ஏற்படும் மகிழ்வைவிட, சிலுவையைக் கழுத்தில் அணிந்து, ஏழை மக்களுக்குப் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றது என்று சொன்னவர் புனித வின்சென்ட். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இப்புனிதர் போன்று, நாமும் பிறரன்பின் திருத்தூதர்களாக மாறுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.