2016-10-12 15:52:00

இது இரக்கத்தின் காலம் : துவண்டு விழும்போது மீள்வதற்கு


ஒருநாள் ஓர் அரசருக்கு இனம்புரியாத மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தார். அரசரின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துவிட்டது. எனவே, அமைச்சர் அரசரிடம், வேட்டையாடப் போவோமா என்றார். அதற்கு அரசர், இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’ என்றார். அரசே, மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரிச் செல்ல வேண்டும், எனவே ‘புறப்படுங்கள், போகிற வழியில் உங்களுடைய குருநாதரின் ஆசிரமம் உள்ளதுதானே, அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’ என்றார் அமைச்சர். வேட்டைக்காக இல்லாவிட்டாலும், குருவைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தார் அரசர். ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த குருநாதரும், அவருடைய சீடர்களும் அரசரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். பின்னர், அரசர் தன் குருநாதரைத் தனியே சந்தித்து, தனது குழப்பங்களை விவரித்தார். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்து வைத்திருந்த தீர்வுகளையும் சொன்னார். குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் அரசர், ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ என்று கேட்க, அவர் பதில் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு ‘நீ புறப்படலாம்’என்றார் குருநாதர். அரசர் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டார். நாலுகால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானார். இதைப் பார்த்த அமைச்சர் குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்சனையை எப்படித் தீர்த்து வைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார். உன் அரசர் ரொம்பப் புத்திசாலி. அவரே தன் பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டார்’என்றார் குரு. ‘நான் செய்ததெல்லாம், அரசர் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’. ஆம். சாய்ந்துகொள்ள ஒரு தோளும், தாங்கிக் கொள்ள ஒரு மடியும் இருந்தால், துவண்டு விழும்போது மீண்டு எழலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.