2016-10-11 16:18:00

தாழ்மையோடு நல்லதைச் செய்ய திருத்தந்தை அழைப்பு


அக்.11,2016. தாழ்மையோடு நல்ல காரியங்களை ஆற்றுமாறும், இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காட்டுகின்ற மற்றும், வெளித்தோற்றத்தில் மட்டுமே கருத்தாய் இருக்கின்ற மதத்தைப் புறக்கணிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் விழாவான இச்செவ்வாய் காலையில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், கிறிஸ்தவ விடுதலை குறித்து அவர் கூறியுள்ள சொற்களையும், பரிசேயரின் வெளிவேடத்தை இயேசு கண்டித்துப் பேசும், இந்நாளைய நற்செய்தி வாசகத்தையும் மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

வெளிப்புறத் தூய்மையில் முழுவதும் கவனம் செலுத்தும் பரிசேயர்களின் வெளிவேடத்தை இயேசு கண்டித்துப் பேசுவது குறித்து விளக்கிய திருத்தந்தை, ஆடம்பரமின்றி நற்செயல்களை ஆற்றத்தூண்டும் அக விடுதலை பற்றியும் மறையுரையில் குறிப்பிட்டார்.

உண்மையான மதத்தின் பாதை, இயேசுவின் பாதை என்றும், தாழ்மையும், தாழ்மைப்படுத்தப்படுதலுமே, இயேசுவின் பாதை என்றும் கூறிய திருத்தந்தை, இப்பாதையே, தன்னலம், பொருளாசை, அகந்தை, ஆணவம், தற்பெருமை, உலகப்போக்கு போன்றவற்றை நம்மிலிருந்து அகற்றும் என்றும் கூறினார். 

மீட்பால் நமக்குக் கொடுக்கப்பட்ட விடுதலையே முக்கியமானது என்பதையும் வலியுறுத்திப் பேசிய திருத்தந்தை, வெளிவேடத் தன்மை கொண்ட மதத்தைப் புறக்கணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அன்பையும், மீட்பையும், அக சுதந்திரத்தையும் தருகின்ற விடுதலை பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவனிடமிருந்து வரும் ஏற்புடைமையை ஏற்குமாறு இயேசு நம்மைக் கேட்கிறார் என்றும் கூறினார்.

தாழ்மையோடு நல்லதைச் செய்ய இயேசு விடுக்கும் அழைப்புக்குச் செவிசாய்க்கவும், அவ்வாறு செய்யும் பாதையில் ஒருபோதும் சோர்வுறாமல் இருக்கவும், இயேசுவிடம், அருளை கேட்போம் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.