2016-10-11 16:38:00

ஆசியத் திருஅவை புதிய கர்தினால்களை மகிழ்வோடு வரவேற்கிறது


அக்.11,2016. ஆசியத் திருஅவைக்கு, மேலும் புதிய கர்தினால்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்திருப்பது, ஆசியா மற்றும் அதன் மக்கள்மீது திருத்தந்தை கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்துகின்றது என்று, இந்தியக் கர்தினால் ஒருவர் கூறினார்.

மலேசியாவின் கோலா லம்பூரின் முன்னாள் பேராயர் அந்தோனி சொட்டெர் ஃபெர்னான்டெஸ், பங்களாதேஷின் டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ, சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி ஆகிய மூவரும் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து, தனது மகிழ்வை வெளியிட்டுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இப்புதிய கர்தினால்களை, ஆசியத் திருஅவை, நன்றியோடும், மகிழ்வோடும் வரவேற்கின்றது என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராகிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்காக உழைத்துவரும் பேராயர் செனாரி அவர்களைத் திருத்தந்தை தெரிவு செய்திருப்பது குறித்து, நம் மனங்கள் நன்றியால் நிறைந்துள்ளன என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.  

உலகின் 11 நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 17 புதிய கர்தினால்களுக்கு நவம்பர் 19ம் தேதி நடைபெறும் திருவழிபாட்டில் பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார்.

மேலும், இந்த 17 புதிய கர்தினால்களுள் ஒருவரான, மத்திய ஆப்ரிக்க குடியரசின் Bangui பேராயர் Dieudonné Nzapalainga அவர்களின் வயது 49. திருஅவையின் கர்தினால்கள் குழுவில் இவரே இளையவர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.