2016-10-10 15:23:00

வாரம் ஓர் அலசல் – கொடிது கொடிது முதுமையில் தனிமை


அக்.10,2016. கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை மூதாட்டி. ஆனால், முகநூல் நண்பர் ஒருவர், இக்கூற்றில் மேலும் சில சொற்களைச் சேர்த்து, இளமையில் வறுமையும், முதுமையில் தனிமையும் கொடிது கொடிது என்று பதிவுசெய்திருக்கிறார். குப்பை மேடுகளில் பொறுக்கிய பழைய சாமான்களை, இரண்டு சாக்குகளில் கட்டி, அவற்றை, சிறுவன் ஒருவன், தனது தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் ஒன்றைப் பிரசுரித்து, அதற்குக் கீழே இந்தச் சொற்களை எழுதி, இதில் உங்களுக்கு உடன்பாடா என்று கேட்டிருக்கிறார். அன்பு நேயர்களே, இதில் உங்களுக்கும், உடன்பாடுதான் என்று நம்புகின்றோம். எமக்கும் இதில் உடன்பாடே. அன்பர்களே, 24 வயது நிரம்பிய ஓர் இளைஞர், சென்னையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, வலைத்தளத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார்.

நான் ஒருநாள் மாலை, என் வீட்டின் அருகேயுள்ள ஒரு கடைக்குச் சென்று சில உணவு பொருட்களை வாங்கிவிட்டு, வீட்டை நோக்கி எனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன். ஒரு முதியவர் கையில் தடியை வைத்துக் கொண்டு, தெருவோரமாய் நின்றுகொண்டு, எல்லா வாகனங்களையும் நிறுத்துமாறு கையை நீட்டி கேட்டுக்கொண்டு இருந்தார். அவர் காலிலும் கட்டுபோடப்பட்டு இருந்தது. பெரியவர் காசு ஏதாவது கேட்பார், தந்து விட்டுச் செல்லலாம் என்று வண்டியை நிறுத்தினேன். “தம்பி என் காலில் அடிப்பட்டு இருக்கிறது. சிறிது நேரம் நடந்த பின்னர், என் கால்கள் மிகவும் வலிக்க ஆரம்பித்துவிட்டன. ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. தயவுசெய்து என்னை இந்தச் சுரங்கபாதை முடிவில் விட்டுவிடுகிறாயா. அங்கு இருந்து நான் என் வீட்டிற்கு பொறுமையாக நடந்து சென்று விடுவேன்” என்றார். அவரை, அவர் வீட்டிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து, “உங்க வீடு எங்க இருக்கு? நான் வீட்டிலேயே விட்டு விடுகிறேன்”என்று கேட்டேன். அவர் வீடு இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு, “இந்த காலத்துப் பசங்க, பெரியவர்களை எங்கப்பா மதிக்கறாங்க. ஆனால் நீ வண்டியை நிறுத்தி, என் வீட்டிலேயே விட்டு விடுகிறேன் என்கிறாய். ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

வீட்டிற்குச் செல்லும் வழியில், பேசிக்கொண்டே சென்ற அந்த முதியவர், அந்த இளைஞரிடம், “தம்பி. படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்துகொள். நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உன் நல்ல மனசுக்கு நல்ல மனைவியா வருவா. நான் மனசார சொல்லுகிறேன். இது நிச்சயமா நடக்கும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெரியவர் அழ ஆரம்பித்து விட்டாராம். உடம்பெல்லாம் நடுங்கியதாம். அவரை அவர் வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு, அவரை வாசலில் உட்கார வைத்து, அவரிடம் பேசியபோது அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

தம்பி, எனக்கு இருதயக் கோளாறு இருக்கு. ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையா இருக்கு. வலியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூடத் தோன்றுகிறது. “எனக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மகளை அமெரிக்காவில் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தேன். முதல் மகனுக்காக, யார் யாருக்கோ இலஞ்சம் கொடுத்து, காலில் விழுந்து, ஒரு அரசாங்க வேலையை வாங்கிக் கொடுத்தேன். என்னுடைய அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த வேலையை என் இரண்டாம் மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன். என் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டாள். என்னுடைய காப்புநிதியில் கிடைத்த பணம், சில நிலத்தை விற்று பெற்ற பணம், ஆகியவற்றை வைத்து என் இரு மகன்களின் திருமணத்தை நல்லபடியாக செய்து முடித்தேன். திருமணம் ஆன பிறகு இருவருமே தனிக் குடித்தனம் சென்று விட்டார்கள். ஒருவன் அடையாரில் இருக்கிறான். ஒருவன் திருவான்மியூரில் இருக்கிறான். மாதம் ஒரு முறை குழந்தைகளுடன் வந்து என்னைப் பார்த்துவிட்டு செல்வார்கள் என்று சொன்ன அந்தப் பெரியவர், தம்பி, இந்தத் தள்ளாடும் வயதில் எனக்கென்று யாருமே இல்லை. என் மகன்களுக்காக நான் எவ்வளவோ தியாகங்களைச் செய்தேன். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். பணம் அவர் கண்களை மறைத்துவிட்டது. தொலைபேசியில் அழைத்தால், பிள்ளைகள் படிக்கிறார்கள், தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் நினைத்து நினைத்து வருந்திக்கொண்டு இருக்கின்றேன். ஒவ்வொரு நொடியிலும் தனிமையால் கொல்லப்பட்டு வருகிறேன். தம்பி, நல்லாப் படி. வேலைக்குப் போ. நல்லா பணம் சம்பாதி. ஆனால் அது வெறும் காகிதம்தான், அது மட்டும் வாழ்க்கை இல்லை. இதை நீ மறந்துவிடவே கூடாது. உனக்கு வேண்டியதை வைத்துக்கொள். மீதியை இல்லாதவர்களுக்கு கொடுத்துவிடு. புண்ணியத்தைச் சேரு. என் மகன்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு நான் செலவு செய்த பணத்தை, ஏழைகளுக்கு கொடுத்து இருந்தால், இந்தத் தள்ளாத வயதில், நான் இப்படி கஷ்டப்படும் நிலைமை வந்திருக்குமா. ரொம்ப நன்றி. உன்னை இந்த நிலைமைக்கு உயர்த்திய உன் பெற்றோர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவனாய் இரு. போய்ட்டு வா....  

அன்பு இதயங்களே, அந்த இளைஞர் சொல்கிறார் - ஒரு சிறிய உதவி செய்ததற்கே இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறதே. இனிமேல் என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தேன் என்று. இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை நாம் வாழ்த்துவோம். அன்பர்களே, வயதான காலத்தில் தனிமையில் வாடும் பல பெற்றோரின் கண்ணீர்க் கதைகளை, இக்காலத்தில், அடிக்கடி கேட்க முடிகிறது. ஆனால், இந்திய உச்ச நீதிமன்றம், சொல்லியிருக்கும் ஒரு தீர்ப்பை, இஞ்ஞாயிறு தினத்தாள் ஒன்றில் வாசித்தபோது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. தனிக்குடித்தனத்திற்கு கட்டாயப்படுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, நீதிபதி Anil R. Dave அவர்கள், தீர்ப்பை வெளியிட்டுள்ளார். அதில், வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானம் உடைய பெற்றோரைப் பராமரிக்கவேண்டிய முக்கிய பொறுப்பு, பெற்றோரால் வளர்க்கப்பட்ட மகனுக்கு இருக்கிறது. இது சட்டபூர்வமான கடமையாகவும் கருதப்படுகிறது. வெளிநாடுகளில், திருமணம் முடிந்ததும் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும், பெற்றோருக்கும் மகனுக்கும் தொடர்பில்லாத கலாச்சாரம் நிலவி வருகிறது. ஆனால் இந்தியாவில் பிறந்த ஆண், அவரது பெற்றோரைப் பிரிந்து வாழ்வது, கலாச்சாரத்திற்கு எதிரானது. பணம் சம்பாதிக்க முடியாத அல்லது குறைவாக சம்பாதிக்கும் நிலையில் உள்ள பெற்றோர், அவர்களது மகனின் தயவில் வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களைப் பிரிப்பது சரியான செயல் அல்ல. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடம் இருந்து கணவனைப் பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும், இது போன்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மனைவியை, கணவன் விவாகரத்து செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வயதான பெற்றோரைக் கைவிடும் படித்த இளையோர் மத்தியில், ரமேஷ் என்ற 36 வயதாகும் நோயாளியின் மனஉறுதி நம்மை வியக்க வைக்கிறது. 27 வயதுவரை, சராசரியாக மகிழ்வாக பழநியில் வாழ்ந்த இளைஞர் ரமேஷ், பெற்றோருக்கு ஒரே மகன். தமிழ் முதுகலை பட்டதாரியான இவர், ஆரஞ்சு மிட்டாய் தயாரித்து சுயமாக தொழில் செய்து வந்தார். இவரின் திருமணத்திற்குப் பெற்றோர் ஏற்பாடு செய்தபோது, muscular dystrophy எனப்படும், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்நோய் வந்தால் அடிக்கடி கீழே விழ நேரிடும், விழுந்தால் தானாக எழ முடியாது. படி ஏற முடியாது. கழிப்பறையில் உட்கார முடியாது உட்கார்ந்தால் எழ முடியாது. நடக்க முடியாமல் போய்விடும். வயது ஏற ஏற உடல் எடை கூடி தனக்கும் மற்றவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும். ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாக்கி இதயத் தசையை தாக்கி, இறப்புக்கு கொண்டு சென்றுவிடும். பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்ள நிறைய பொறுமையும், பணமும் வேண்டும், இந்நோய்க்கு இன்றுவரை மருந்து கிடையாது. இப்போது அப்பாவின் ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியப் பணத்தில், வீட்டுவாடகை, உணவு மற்றுமுள்ள செலவுகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை. வயது முதிர்ந்த, செயல்பாடுகள் குறைந்துவிட்ட பெற்றோர் இருவரையும், தன்னையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நிலையில், ரமேஷ் கொஞ்சமும் மனம் தளராமல், நகர்ந்து நகர்ந்தே எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். ஒரு சின்ன ஸ்டூல் ஒன்றை வைத்துக்கொண்டு, அதையும் போகுமிடத்திற்கு கொண்டு போய், போகவேண்டிய இடம் வந்ததும் அதில் உட்கார்ந்து கொண்டு கணனியை இயக்குவது, காலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது, பின் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து பெற்றோருக்கு கொடுப்பது, அவர்களுக்கான காலை நேரப் பணிவிடைகளை செய்வது, பின் வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் விளக்குவது, பிறகு தனது நோய்க்கான பயிற்சி செய்வது என்று இயங்கிவருகிறார். இவரது ஆரஞ்சு மிட்டாய் சுவையில் மயங்கியவர் பலர், வீட்டில் இருந்தே மிட்டாய் தயாரித்து கொடுக்காலாமே என்று சொல்ல, கடன் வாங்கி மிட்டாய் தயாரித்து ஒருவரை சம்பளத்திற்கு வைத்து மிட்டாய் விநியோகம் செய்து வந்தார். ஒரு வாரம் கழித்து ஆயிரம் ரூபாய் மதிப்பு மிட்டாய்களுடன் அவர் ஒடிப்போய்விட்டார். பின்னர், தெரிந்த நல்ல பையன் என்று ஒருவரை இவரிடம் சேர்த்துவிட்டனர். ஒரு மாதம் கழித்து சம்பளம், சைக்கிள், மிட்டாய் மற்றும் மிட்டாய் விற்ற வசூல் பணத்துடன் போன அந்த 'நல்ல பையனும்' இன்றுவரை கண்ணில் படவில்லையாம். இதற்குமேல் கடன்பட்டு தொழில் நடத்த முடியாது என்று, தொழிலை விட்டுவிட்டார் ரமேஷ். இப்போது இவரிடம் இருக்கும் தமிழ் அறிவை வைத்து தின, வார, மாதம் போன்ற தமிழ் இதழ்களுக்கு, நகைச்சுவை துணுக்குகள், கதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். நேற்று என்பது கடந்துபோன நாள், நாளை என்பது கற்பனையான நாள், இன்றைய நாளே கையிலிருக்கும் நாள். இந்த நாளை இனிய நாளாக அமைத்துக்கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ரமேஷ்(நன்றி தினமலர்).

அன்பர்களே, கொடிது கொடிது தனிமை கொடிது. அதனினும் கொடிது முதுமையில் தனிமை. எனவே இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இதை உணர்ந்து, வயதான, ஆற்றல் இழந்த பெற்றோரை, வயதானவர்களைக் கண்கலங்காமல் காப்பாற்ற முன்வருவோம். இறைவனின் ஆசீர், என்றும் உங்கள் தலைமுறைகளைக் காப்பாற்றும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.