2016-10-10 16:23:00

மரணதண்டனை கூடாது – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


அக்.10,2016. "தண்டனை, நம்பிக்கையை, கட்டாயம் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மரண தண்டனைக்கு எதிரான உலக நாள் அக்டோபர் 10, இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதையொட்டி, #NoDeathPenalty, அதாவது, "மரணதண்டனைகூடாது" என்ற ‘ஹேஷ்டாக்’ உடன், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியானது.

மேலும், "இயேசுவின் தாயே கிறிஸ்தவர்களாகிய நமக்கும் தாய், இயேசுவின் தந்தையே நமக்கும் தந்தை. நாம் அனாதைகள் அல்ல!" என்ற சொற்களுடன், திருத்தந்தை தன் ஞாயிறு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். 

இதற்கிடையே, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற அன்னை மரியாவின் யூபிலி திருப்பலிக்குப் பின் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், ஹெயிட்டியில் புயலின் கொடுமைகளால் துன்புறும் மக்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை உணர்ந்து, அவர்களுக்காக சிறப்பான செபங்களை எழுப்புமாறு திருத்தந்தை விண்ணப்பித்தார்.

"அன்னையே, எங்கள் எதிர்காலத்தை உங்களிடம் கையளிக்கிறோம். இவ்வுலகை ஒரு பூந்தோட்டமாகவோ, அல்லது ஒரு குப்பை மேடாகவோ உருவாக்குவது மனிதர்களாகிய எங்கள் கரங்களில் உள்ளது" என்று, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், 2000மாம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, மரியன்னையிடம் உலக மக்களை ஒப்படைத்து வேண்டிய சொற்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.