2016-10-10 16:38:00

அன்னை மரியா இரக்கத்தின் அன்னை - திருத்தந்தையின் உரை


அக்.10,2016. இறைவனின் இரக்க வரலாறு, நமது மீட்பின் வரலாறு இரண்டையும் மிகச் சுருக்கமான முறையில் புரிந்துகொள்ள உதவும் ஒரு தலைசிறந்த பக்தி முயற்சி, நம் செபமாலை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை மாலை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் மறையுரையாற்றினார்.

இத்திருவிழிப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட அனைவரும், மகிமை மறைப்பொருள்களை மையப்படுத்தி செபமாலை செபித்தத்தைக் குறித்து பேசியத் திருத்தந்தை, கிறிஸ்தவ வரலாற்றின் துவக்கத்திலிருந்தே, அன்னை மரியா இரக்கத்தின் அன்னை என்று கொண்டாடப்பட்டு வருவதையும் எடுத்துரைத்தார்.

செபமாலை செபிப்பதால் நம் பிரச்சனைகள் நீங்கிவிடாது என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாள் வரலாற்றிலும், கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து, விசுவசிப்பதற்கு செபமாலை நமக்கு உதவுகிறது என்று கூறினார்.      

தன் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இறைவனின் இரக்கத்தை வெளிப்படுத்திய அன்னை மரியா, ஓர் அன்னையின் பரிவோடு நம்மை ஒவ்வொரு நாள் வாழ்விலும் வழிநடத்த வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.