2016-10-08 14:36:00

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


உலகைச் சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதை இது. இருவரும் தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களையெல்லாம் சேகரித்த வண்ணம் சென்றனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடை நிறைந்து வழிந்ததால், அவரால் அதைச் சுமக்க முடியாமல் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.

முதல் தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழும் செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழும் செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்ற வேண்டுதல்கள் திரட்டப்பட்டக் கூடை நிரம்பி வழிய, 'இதற்கு நன்றி, அதற்கு நன்றி' என்ற நன்றி செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது.

கிடைத்த நன்மைகளுக்கு நன்றி சொல்லும் நேரங்களைவிட, இன்னும் தேவை என்று விண்ணப்பிக்கும் நேரங்களே நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். மனித உணர்வுகளில், மிக அரிதாகிவரும் நன்றி உணர்வைக் குறித்து இரு தொழுநோயாளர்கள் வழியே கற்றுக்கொள்ள, இந்த ஞாயிறு வழிபாட்டில் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழுநோயால் துன்புற்ற,  சிரியா நாட்டுப் படைத்தலைவன் நாமான், இஸ்ரயேல் நாட்டில் வாழும் கடவுளின் அடியவரான எலிசாவைத் தேடிச் செல்கிறார். "அந்நாட்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார்" (2 அரசர்கள் 5: 14) என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. இவ்வரிகளை வாசிக்கும்போது, யோர்தான் நதியில், மிக எளிதாக, சுமுகமாக இப்புதுமை நிகழ்ந்ததைப்போல் உணர வாய்ப்புண்டு. ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்தது வேறு.

படைத்தலைவன் நாமான், உடலளவில் நலம் பெறுவதற்குமுன், அவரது ஆணவம், கோபம் என்ற பல நோய்களிலிருந்து அவர் நலம்பெற வேண்டியிருந்தது. தன் பணபலத்தைப் பயன்படுத்தி, தன் உடல் நலனை வாங்கிவிட முடியும் என்ற கற்பனையோடு சிரியா நாட்டிலிருந்து, இஸ்ரயேல் நாட்டிற்கு சென்ற நாமான், முற்றிலும் மாறவேண்டியிருந்தது. ஏறத்தாழ, அவர் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது. இதைத்தான், இன்றைய வாசத்தின் அடுத்த வரி அழகாகச் சித்திரிக்கிறது. யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழுந்த நாமானின் "உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது" (2 அர. 5:14) என்று வாசிக்கிறோம். அவர் யோர்தானுக்குச் செல்லும் முன்னரே, ஒரு குழந்தையைப்போல் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டதால், ஒரு சிறு பிள்ளையைப் போன்ற உடலையும் அவரால் பெறமுடிந்தது.

ஆணவத்தோடு, படைத்தலைவனாக, தன் வீட்டுக்கு முன் வந்து நின்ற நாமானைச் சந்திக்க மறுத்த இறைவாக்கினர் எலிசா, குழந்தை மனதோடு, சிறு பிள்ளையின் உடலோடு யோர்தானிலிருந்து திரும்பி வந்த நாமானைச் சந்திக்கிறார். நாமானிடம் உருவான மாற்றங்கள் அழகானவை!

சிரியாவிலிருந்து நாமான் புறப்பட்டபோது, உடலில் தொழுநோயையும், உள்ளத்தில் ஆணவத்தையும், உடன் வந்தவர்கள் வழியே தன் செல்வத்தையும் சுமந்து சென்றார். அவர் சிரியாவுக்குத் திரும்பிச் சென்றபோது, உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று, இஸ்ரயேல் நாட்டின் மண்ணைச் சுமந்து சென்றார். தான் கொண்டு செல்லும் செல்வத்தைக்கொண்டு இறைவனையே விலைபேச முடியும் என்ற கற்பனையுடன் சென்ற நாமான், விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற கொடையைப் பெற்றுத் திரும்பினார். தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், அவர், உண்மையான நன்றி உணர்வுடன் வாழ்ந்திருப்பார் என்று நம்பலாம்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் மற்றொரு தொழுநோயாளர், நன்றி உணர்வு கொண்டவர் என்று, இயேசுவிடம் பாராட்டு பெறுகிறார். நன்றியுணர்வைப்பற்றி சொல்லித்தருவதே இப்பகுதியின் முக்கிய நோக்கம் எனினும், மற்றுமொரு முக்கியமான பாடத்தையும் இன்றைய நற்செய்தி சொல்லித் தருகிறது. இந்தப் பாடம், இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளிலேயே சொல்லித்தரப்படுகிறது.

இயேசு ‘கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்’ என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் கலந்து வாழ்ந்தப் பகுதிகள் அவை. அர்த்தமற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமுதாயமும், சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்தப் புறக்கணிப்பு, அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது, மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது. பல ஆண்டுகளுக்குமுன், பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. அந்நகரிலிருந்த தூய வளனார் கல்லூரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள், கல்லூரிக் கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாரும் சேர்ந்து கல்லூரி கட்டடத்தில் தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

அவர்கள் வீட்டுச் சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் உள்ளத்தில் கட்டப்பட்டிருந்த பிரிவுச்சுவர்கள் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்தபின், மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை கற்களால் எழுப்பியபோது, அவர்கள் உள்ளங்களிலும் பிரிவுச்சுவர்கள் கட்டப்பட்டுவிட்டன என்பது கசப்பான உண்மை.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும், என்ன நடந்திருக்கும் என்பதை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்" என்று நற்செய்தி கூறுகிறது.

திரும்பிவந்த அவரைக் கண்டதும், "மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்கா 17: 17) என்று இயேசு தேடுகிறார். இந்தக் கேள்வியில் இயேசுவின் ஏக்கம் தெளிவாகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல அது. நோயுற்றிருந்தபோது பத்துபேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, நிச்சயம் மகிழ்ந்திருப்பார். அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கத்தை இயேசு இந்தக் கேள்வியில் வெளிப்படுத்தினார்.

அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில், அது காணாமல்போனது.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்தச் சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" (லூக்கா 17: 15) என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை வாட்டி வதைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது, மற்றொரு தீட்டாக மாறுமே.

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில், இப்போது வேற்றுமை எண்ணங்கள் புகுந்துவிட்டன என்பதை, அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம் என்ற தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.

திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து, இயேசுவுக்கு வேதனை. அந்த வேதனை, "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற வார்த்தைகளாக வெளிவருகின்றன.

இயேசுவின் வேதனை நிறைந்த இக்கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும், மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே, இது ஏன்? இன்றைய நற்செய்தி, இக்கேள்வியை நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லித்தரும் முக்கியமானப் பாடமான நன்றி உணர்வின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய சொந்த வாழ்விலும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதை ஓர் ஆன்மீக ஆய்வாக இன்று மேற்கொள்ளலாம். நம்மில் பலருக்கு, நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்துவரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகமாகின்றன. நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.

முதியோர் இல்லம் ஒன்றில், இடம்பெற்ற ஒரு நிகழ்வோடு நம் ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம். அந்த முதியோர் இல்லத்தில் நோயுற்று படுத்திருந்த, ரோசி என்ற வயதான பெண்ணின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச் சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

நாளடைவில், ரோசியால் தன் கைகளையும், கால்களையும் அசைக்க முடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்க முடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்க முடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே...  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறிவந்தது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நீ என்னை தினமும் பார்க்க வருகிறாயே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார்.

இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்.

அக்டோபர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் வத்திக்கானில் மரியன்னையின் யூபிலி சிறப்பிக்கப்படுகின்றது. நன்றியின் இலக்கணமாக வாழ்ந்த அன்னை மரியா, நம்மை, நன்றியுள்ளவர்களாக என்றும் வாழ வழிநடத்துவராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.