2016-10-08 15:43:00

கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி மக்களுக்கு செபம்


அக்.08,2016. ஹெய்ட்டி நாட்டில் ‘மேத்யூ’கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு, விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கரீபியன் பகுதியிலுள்ள சிறிய தீவு நாடான ஹெய்ட்டியில், அக்டோபர் 4, கடந்த செவ்வாயன்று, மணிக்கு, 235 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த கடும் புயலில் ஏறக்குறைய மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 800க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்நாடு எதிர்நோக்கும் கடும் சவால்களுக்கு, தெளிவான நடவடிக்கைகள் வழியாக, ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு, விண்ணப்பித்துள்ளார்.

இப்புயலில் இறந்தவர்கள், நிறைசாந்தியை அடைவதற்குத் தான் செபிப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆன்மீக அன்பைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இவ்விண்ணப்பத் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஹெய்ட்டி ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Chibly Langlois அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.