2016-10-08 15:53:00

இந்தியாவின் அமைதிக்காக சிறப்பு செப நாள் அக்டோபர் 16


அக்.08,2016. இந்தியாவின் எல்லைகளில் பதட்டநிலைகள் சூழ்ந்துள்ள இவ்வேளையில், நாட்டின் அமைதிக்காக, சிறப்பான திருவழிபாடுகளை நடத்திச் செபிக்குமாறு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 16ம் தேதி ஞாயிறன்று, சிறப்பான திருவழிபாடுகள் மற்றும் செபங்கள் செய்து, நாட்டிற்காகவும், அதன் தலைவர்கள் மற்றும் மக்களுக்காகச் செபிக்குமாறு  கர்தினால் கிளீமிஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை கூறுகின்றது.

அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு விழாக்களின் மாதம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கர்தினால், இவ்வாண்டில் இவ்விழாக்கள், நாட்டின் எல்லைகளில் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழலில் சிறப்பிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி, அக்டோபர் 4, கிறிஸ்தவர்க்கு புனித பிரான்சிஸ் அசிசியார் விழா, அக்டோபர் 11, இந்துக்களுக்கு தசரா, அக்டோபர் 12, முஸ்லிம்களுக்கு முகரம், அக்டோபர் 20, சீக்கியர்க்கு, குருநானக் ஜெயந்தி, அக்டோபர் 30 தீபாவளி என்று, அக்டோபர் விழா நாள்களைக் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் பொதுநிலை விசுவாசிகள் என, அனைவரும், அக்டோபர் 16ம் தேதியன்று, நாட்டின் அமைதி மற்றும் நல்வாழ்வுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளார், கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.