2016-10-07 16:20:00

ஜம்மு-காஷ்மீரில் கண் வங்கி தொடங்க திருஅவை முயற்சி


அக்.07,2016. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கென, முதலில், கண் வங்கி தொடங்குவதற்கு அரசின் அனுமதியைக் கோரியுள்ளது, அம்மாநில கத்தோலிக்க மறைமாவட்டம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில நலவாழ்வு மையத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது குறித்து தெரிவித்த, ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்ட நலப்பணி மைய இயக்குனர் அருள்பணி Shaiju Chacko அவர்கள், தேவையான அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும், இனம், மதம் என்ற வேறுபாடின்றி, துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கே, திருஅவை முன்னுரிமை கொடுக்கின்றது என்று, அருள்பணி Chacko அவர்கள் மேலும் கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஏறக்குறைய 800 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஏறக்குறைய 250 பேர் கண்பார்வையை இழந்துள்ளனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர் என்றும் அருள்பணி Chacko அவர்கள் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில், ஏறத்தாழ 11,000 பேர் காயமடைந்துள்ளனர், மற்றும், குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.