2016-10-07 15:37:00

அமலமரி தியாகிகள் சபையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


அக்.07,2016. பிரெஞ்சு புரட்சி காலத்தில், மக்கள், கிறிஸ்தவ விசுவாச வாழ்விலிருந்து விலகிச் சென்ற வேளையில், அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த துறவிகள், அவர்கள் உள்ளங்களில் விசுவாச ஒளியை மீண்டும் தூண்டிவிட்டனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

200 ஆண்டுகள் நிறைவை இவ்வாண்டு கொண்டாடும் அமலமரி தியாகிகள் சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 100க்கும் அதிகமானப் பிரதிநிதிகளை, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அண்மையில் அத்துறவு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.

இத்துறவு சபையைத் தோற்றுவித்த அருளாளர், Eugene de Mazenod அவர்கள், புனித வெள்ளியன்று, திருச்சிலுவைக்கு முன் பெற்ற ஓர் இரக்க அனுபவத்தின் விளைவாக இச்சபை உருவானதால், இரக்கம், இச்சபையின் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

மாறிவரும் இவ்வுலகோடு சேர்ந்து, திருஅவையும் மாற்றங்களைச் சந்தித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், மாறாத இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த, அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த துறவிகள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.

மறைபரப்பும் பணியை தங்கள் தனிவரமாகப் பெற்றிருக்கும் இத்துறவு சபையினர், நற்செய்தி, விடுதலையும், ஆறுதலும் வழங்குகிறது என்ற செய்தியை இவ்வுலகெங்கும் பறைசாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

மூன்றாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் அமலமரி தியாகிகள் சபைத் துறவிகள், அவர்களது முன்னோர், கடந்த 200 ஆண்டுகளாக ஆற்றிவந்த பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு பேரவை பிரதிநிதிகளிடம் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.