2016-10-06 15:50:00

முன்னேற்றங்கள் சமமாக அனைவரையும் அடையவில்லை


அக்.06,2016. வறுமை குறைந்துள்ளது, மக்களின் நலவாழ்வு முன்னேறியுள்ளது, கல்வியும், தொடர்பு வசதிகளும் பெருகியுள்ளன என்று 2016ம் ஆண்டுக்குரிய ஐ.நா.வின் அறிக்கை கூறினாலும், இந்த முன்னேற்றங்கள் சமமான நிலையில் அனைவரையும் அடையவில்லை என்பதும் உண்மை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. பொது அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. அவையின் 71வது பொது அமர்வில் உரையாற்றுகையில், உலகின் சமநிலையற்ற கொடுமை, அண்மைய ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்பதைக் கூறினார்.

மோதல்கள் பெருகியுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகளும், இளையோரும், சட்ட திட்டங்களால் நெறிப்படுத்தப்படுவதற்குப் பதில், போர்களின் கொடுமைகளால் திசைதிருப்பப்படுகின்றனர் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அமைதி, நீதி என்ற அடிப்படை விழுமியங்கள் நிலவும்  சமுதாயத்தில் வளர்வது ஒவ்வொரு மனிதப் பிறவியின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் அவுசா அவர்கள், தங்கள் சொந்த நாட்டில் தங்க முடியாமல் துரத்தப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதையும் தன் உரையில் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பின்றி தவிக்கும் உலகிற்கு பாதுகாப்பு தருவதும், வாழவேண்டும் என்று விரும்பும் உலகிற்கு வாழ்வைத் தருவதும் உலக அரசுகளின் முக்கியக் கடமை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் கூறிய வார்த்தைகளை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.