2016-10-06 15:25:00

திருத்தந்தைக்கு கான்டர்பரி பேராயரின் வாழ்த்துரை


அக்.06,2016. துன்பமான, கடினமான சூழல்களில் வாழும் மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு ஆறுதல் வழங்குவதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவது, ஆங்கிலிக்கன் சபையைச் சேர்ந்தவர்களிடம் ஆழமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது என்று, கான்டர்பரி பேராயரும், ஆங்கிலிக்கன் சபையின் உலகத் தலைவருமான, ஜஸ்டின் வெல்பி அவர்கள் கூறினார்.

திருத்தந்தை 6ம் பவுல் மற்றும் மைக்கிள் இராம்சி ஆகியோரின் சந்திப்பில் துவங்கிய ஆங்கிலிக்கன் கத்தோலிக்க ஒன்றிப்பின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, உரோம் நகர் வந்திருக்கும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் குழுவின் உயர்மட்ட பிரதிநிதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது, அவருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த பேராயர் வெல்பி அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகை துன்புறுத்தும் வறுமை, மனித வர்த்தகம், புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, சுற்றுச்சூழல் சீரழிவு என்ற பல கொடுமைகளைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசி வருவதால், கத்தோலிக்கத் திருஅவை என்ற எல்லையைக் கடந்து, திருத்தந்தையின் நேர்மறையானத் தாக்கம் இவ்வுலகை அடைந்து வருகிறது என்று பேராயர் வெல்பி அவர்கள் தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளில் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் சபைகளிடையே வளர்ந்துவரும் ஒன்றிப்பை வரலாற்று நிகழ்வுகளுடன் குறிப்பிட்ட பேராயர் வெல்பி அவர்கள், கிறிஸ்து, தன் மரணம், உயிர்ப்பு என்ற மறைப்பொருள்கள் வழியே, பிரிவுகளை அகற்றி, மனிதர்களுக்கு உரிய மாண்பை வழங்கியுள்ளார் என்பதை, இந்த ஒன்றிப்பு பயணத்தில் உணர முடிகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.