2016-10-06 15:13:00

திருஅவையை முன்னோக்கி நடத்திச் செல்வது, தூய ஆவியார்


அக்.06,2016. உண்மையான கோட்பாடுகள் வழி வாழ்வது, சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவதில் அல்ல, மாறாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு உள்ளத்தைத் திறப்பதில் அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, தூய ஆவியாரைக் குறித்து திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறியுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

திருஅவையை துணிவுடன் முன்னோக்கி வழிநடத்திச் செல்வது, தூய ஆவியார் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, அவரின்றி, திருஅவை, மூடப்பட்டக் கதவுகளுக்குப்பின் அச்சத்துடன் வாழவேண்டியிருக்கும் என்று எடுத்துரைத்தார்.

சட்டங்களைப் பின்பற்றி வாழ்வது நமது தேவையே என்றாலும், இறைவனின் உண்மையான கொடையான தூய ஆவியாரைக் காட்டிலும், சட்டங்களுக்கு முதலிடம் தருவது தவறு என்பதை, திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளக்கிக் கூறினார்.

தூய ஆவியாரால் தூண்டப்படாமல், சட்டங்களால் மயக்கப்பட்டு வாழும்போது, தூய ஆவியாரை நாம் வேதனையுறச் செய்கிறோம் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

படகு ஒன்று பாய்மரம் விரிக்கும்போது வீசும் காற்று அதனை முன்னோக்கித் தள்ளிச் செல்கிறது என்ற உருவகத்தை, தன் மறையுரையில் பயன்படுத்தியத் திருத்தந்தை, தூய ஆவியார் நம் வாழ்வில் நுழையும்போது, நம் வாழ்வும் முன்னோக்கிச் செல்லும் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.