2016-10-06 16:01:00

கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர் இணைந்த அறிக்கை


அக்.06,2016. கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபையினருக்கும் இடையே வளர்ந்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில், இன்னும் சில தடைகள் உள்ளன என்றாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்வீடன் நாட்டிற்கு வருகை தருவது, இந்த ஒன்றிப்பு முயற்சியை பெருமளவு ஊக்கப்படுத்தும் என்று, ஸ்வீடன் நாட்டின் கத்தோலிக்க ஆயர்களும் லூத்தரன் சபை தலைவர்களும் கூறியுள்ளனர்.

லூத்தரன் சீர்திருத்த சபை உருவானதன் 500ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு, அக்டோபர் 31, மற்றும் நவம்பர் 1 ஆகிய இரு நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டுக்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதையொட்டி, சுவீடன் நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு நாளிதழில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

ஸ்வீடன் நாட்டின் Stockholm மறைமாவட்ட ஆயர்,  Anders Arborelius அவர்களும், சுவீடன் லூத்தரன் சபை பேராயர் Antje Jackelen அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கத்தோலிக்கர்களும், லூத்தரன் சபையினரும் சீர்திருத்தம் என்ற எண்ணத்தை ஒன்றிணைந்த பார்வையில் காண்பதற்கு திருத்தந்தையின் வருகை ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாக, கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபையினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட உரையாடல் முயற்சிகளின் சிகரமாக இந்தப் பயணம் அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பாதையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இரக்கத்தின் சிறப்பு யூபிலியின்போது இடம்பெறுவது பொருத்தமானது என்றும் கத்தோலிக்கர்களும், லூத்தரன் சபையினரும் இணைந்து வெளியிட்டுள்ள இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.