2016-10-06 15:42:00

கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் சபைகளின் கூட்டறிக்கை


அக்.06,2016. அக்டோபர் 5, இப்புதன் மாலை, உரோம் நகரின் Celioவில் அமைந்துள்ள புனித பெரிய கிரகரி பேராலயத்தில், கத்தோலிக்கரும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து மேற்கொண்ட மாலை வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆங்கிலிக்கன் சபையின் தலைவரும், கான்டர்பரி பேராயருமான ஜஸ்டின் வெல்பி அவர்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

திருத்தூதர்களான பேதுருவும், பவுலும் தங்கள் இரத்தத்தால் புனிதமாக்கிய இந்த உரோமை நகரில், 50 ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை 6ம் பவுல், மற்றும் பேராயர் மைக்கிள் இராம்சி இருவரும் சந்தித்தனர் என்றும், திருத்தந்தை 2ம் ஜான்பால், பேராயர் இராபர்ட் ரூன்சியுடனும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உடனும் இந்தப் பேராலயத்தில் சந்தித்து செபித்தனர் என்றும், இவ்வறிக்கையின் ஆரம்ப வரிகள் கூறுகின்றன.

ஆங்கிலோ சாக்ஸன் மக்களுக்கு நற்செய்தியை பறைசாற்ற, புனித பெரிய கிரகரி, புனித அகஸ்டினை அனுப்பிய காலத்திலிருந்து, கத்தோலிக்கரும், ஆங்கிலிக்கன் சபையினரும் தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தி என்ற கொடையை ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர் என்ற வரலாறும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"உலகின் கடையெல்லைவரைக்கும்" (தி.ப. 1:8) கிறிஸ்துவின் சாட்சிகளாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறும் இவ்வறிக்கை, 'கடையெல்லை' என்பது, புவியியல் அடிப்படையில் கூறப்படும் எல்லை மட்டும் அல்ல, மாறாக, சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச் செல்லுதல் என்பதையும் உள்ளடக்கியது என்று கூறியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஒன்றிப்பு முயற்சிகள், பல வழிகளில் முன்னேற்றம் பெற்றுள்ளன என்றாலும், இன்னும் சில ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்று கூறும் இவ்வறிக்கை, பெண்களை அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்தல், ஓரின சேர்க்கை குறித்த புரிதல் என்ற இரு அம்சங்கள், ஒன்றிப்பிற்கு உள்ள குறிப்பிட்ட தடைகள் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

இத்தடைகளைத் தாண்டி, கிறிஸ்தவ நம்பிக்கை என்ற அடித்தளம், நம்மை இணைக்க முடியும் என்றும், செபித்தல், மனிதர்களுக்குப் பணியாற்றுதல் என்ற நிலைகளில் நாம் ஒன்றிணைந்து வர முடியும் என்றும், இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

செபத்திலும், பணியிலும், இணையும் கத்தோலிக்கரையும், ஆங்கிலிக்கன் சபையினரையும் காணும் உலகம், இறைவனைப் புகழும் என்று இவ்வறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.