2016-10-06 14:33:00

இது இரக்கத்தின் காலம் : வயதானவருக்கு மரியாதை செலுத்தினால்..


அரசர் ஒருவர் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றார். அப்போது பறவை ஒன்று இறக்கைகளைப் பட படவென்று அடித்தபடி கூவியது. பறவைகளின் மொழி அறிந்த படை வீரர் ஒருவரை அழைத்து, இந்தப் பறவை என்ன சொல்கிறது? என்று கேட்டார் அரசர். அரசே! அந்தப் பறவை நம்மைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், உழவர் ஒருவர் புல் வெட்டுவதற்காக வருவார். அவர் பாம்பு கடித்து இறந்துவிடுவார் என்று சொன்னது! என்றார் வீரர். அப்போது அவ்வழியாக, உழவர் ஒருவர், கையில் அரிவாளுடன் சென்றார். அவரைப் பார்த்த அரசர், “பறவை சொன்னதில் பாதி நடந்து உள்ளது. மீதியும் நடக்கிறதா?’ என்று அறிய ஆவல் கொண்டார். தன் வீரர்களுடன் அங்கேயே தங்கினார். மாலை நேரம் வந்தது. தலையில் புல் கட்டுடன் அந்த உழவர் திரும்ப வந்தார். இதைப் பார்த்த அரசர், அந்த வீரரை அழைத்து, உழவர் உயிரோடு திரும்பிச் செல்வதற்குக் காரணம் கேட்டார். “அரசே! பறவை சொன்ன மொழி இதுவரை தவறியது இல்லை. இவர் உயிர் பிழைக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும். இவரை விசாரித்தால் உண்மை தெரியும்!” என்றார் அந்த வீரர். உடனே, உழவரை அழைத்து, உழவரே! உம் புல் கட்டைக் கீழே போடும்!” என்றார் அந்த வீரர். உழவரும் புல் கட்டைக் கீழே போட்டார். புல் கட்டு விழுந்த வேகத்தில் அதைக் கட்டியிருந்த கயிறு அறுந்தது. உள்ளே இருந்த புற்கள் பரவலாக விழுந்தன. அதில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டு இறந்து கிடப்பது தெரிந்தது. அந்த உழவரைப் பார்த்து அரசர், “நீ புல் வெட்ட காட்டிற்குள் சென்றாய். அங்கே விந்தையான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா?” என்று கேட்டார். அரசே! அப்படி எதுவும் நடக்கவில்லை. வழியில் முதியவர் ஒருவர் வந்தார். நான் அவரைப் பணிவாக வணங்கினேன். நீடூழி வாழ்க என்று என்னை அவர் வாழ்த்தினார்!” என்றார் உழவர். இதைக் கேட்ட அந்த வீரர், “அரசே! அந்த முதியவரின் வாழ்த்துதான் இவரைக் காப்பாற்றி உள்ளது. உயர்ந்த சான்றோர்களின் சொற்கள் விதியையும் மாற்றும் வல்லமை வாய்ந்தவை” என்றார். “நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட” (லேவி.19,32) என்கின்றது திருவிவிலியம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.