2016-10-05 16:19:00

"விசுவாசமும் விளையாட்டும்" பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


அக்.05,2016. "இன்னும் வேகமாக, உயரமாக, சக்தி மிக்கதாக" (Citius, Altius, Fortius) என்ற விருதுவாக்கின் வழியே, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நமக்குக் கூறும் எண்ணங்கள், இறைவன் வழங்கியுள்ள திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த விளையாட்டுத் துறை வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் கூறினார்.

"விசுவாசத்தையும் விளையாட்டையும்" இணைக்கும் ஒரு முயற்சியாக, திருப்பீட கலாச்சார அவை முதல்முறையாக ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருக்கும் 7000த்திற்கும் அதிகமானோரை, இப்புதன் பிற்பகல், வத்திக்கான் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

உடல் வலிமை என்ற நிலையைத் தாண்டி, மற்றவர்களோடு இணைந்து குழுவாகச் செயலாற்றுவது என்ற நிலையில், ஓர் ஆன்மீக உணர்வை, விளையாட்டுக்கள் நமக்குத் தருகின்றன என்று கூறியத் திருத்தந்தை, இந்நிலையில் நாம் உண்மையான மகிழ்வையும், நிறைவையும் அடைகிறோம் என்று எடுத்துரைத்தார்.

அனைவரையும் உள்ளடக்கி விளையாட்டுக்களை ஏற்பாடு செய்வது எவ்வாறு என்பதை இந்த பன்னாட்டு கருத்தரங்கில் விவாதிக்க உள்ளதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை, மிகத் தீவிரமான நிலையில் ஏற்படும் போட்டிகள் என்ற சூழலை விடுத்து, விளையாட்டுக்கள் வெளியேறும்போது, அங்கு, பங்கேற்பு, அனைவரும் இணைந்து மகிழ்தல் என்ற உணர்வுகள் மேலோங்குவதைக் காண முடிகிறது என்று கூறினார்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினரை திருத்தந்தை சந்தித்த இந்நிகழ்வில், ஐ.நா. அவையின் பொதுச் செயலர், பான் கி மூன் அவர்களும், அனைத்துலக ஒலிம்பிக் கழகத்தின் தலைவர், தாமஸ் பாக் (Thomas Bach) அவர்களும் கலந்துகொண்டதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.