2016-10-05 16:09:00

திருத்தந்தையின் வாழ்த்துபெற்ற Vodafone நிறுவன நிர்வாகிகள்


அக்.05,2016. "Instant Schools for Africa" அதாவது, "ஆப்ரிக்காவிற்கு நொடிப்பொழுது பள்ளிகள்" என்ற புதிய திட்டத்தை அறிவித்திருக்கும் Vodafone நிறுவனத்தின் நிர்வாகிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நேரில் சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் ஆப்ரிக்க இளையோர் கல்வி வசதிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், இத்தாலியில் இயங்கிவரும் Vodafone நிறுவனம், அவர்களுக்கு "Instant Schools for Africa" என்ற முயற்சியைத் துவக்கியுள்ளது.

இந்த முயற்சியைத் துவக்கியிருக்கும் Vodafone நிறுவனத்தின் நிர்வாகிகள் 40 பேரை இப்புதன் காலை, பொது மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்குமுன், திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாரையும் ஒதுக்கிவைக்காமல், அனைவரையும் உள்ளடக்கும் வண்ணம் உருவாக்கப்படும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று கூறினார்.

தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தும் இளையோர், கருவிகள் தங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அவற்றை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் கல்வியையும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத உணர்வுகளில் வளர்ந்திருக்கும் ஆப்ரிக்க நாடுகளை மனதில் கொண்டு, ஆப்ரிக்க இளையோருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளில், அனைத்து மதங்களின் புனிதமான பகுதிகள் இளையோரை அடைவதற்கும் வழிவகுக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

அப்பாவி மக்களை குண்டுகளால் தாக்கி அழித்துவரும் இன்றைய காலக்கட்டத்தில், இளையோரை கட்டியெழுப்பும் இத்தகைய முயற்சிகளால் மனிதம் இவ்வுலகில் தழைக்கும் என்று தான் நம்புவதாகவும், அதற்கு வழிவகுத்துள்ள Vodafone நிறுவனத்தை தான் வாழ்த்துவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் இச்சந்திப்பின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.