2016-10-05 16:43:00

ஜார்ஜியா,அசர்பைஜான் நாடுகளின் அரசு, மத அதிகாரிகளுக்கு நன்றி


அக்.05,2016. அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை நிகழ்வை தொடங்குவதற்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள மற்றுமோர் அறையில், Vodafone அலைபேசி நிறுவனத்தின் நாற்பது பேரைச் சந்தித்தார். "ஆப்ரிக்காவிற்கு நொடிப்பொழுது பள்ளிகள்" என்ற புதிய திட்டத்தை அறிவித்திருக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திருத்தந்தை. மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இக்காலத்திற்கு அவசியம் என்று சொல்லி, சமூகத்தைக் கட்டியெழுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார். பின்னர், வத்திக்கான் வளாகத்திற்கு வந்து, கடந்த ஞாயிறன்று தான் நிறைவு செய்த ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளின் திருத்தூதுப் பயணம் பற்றிய சிந்தனைகளை, அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் 200 ஏழைகளும் கலந்து கொண்டனர்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, எனது அண்மை ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளின் திருத்தூதுப் பயணத்திற்காக, ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். இவ்விரு நாடுகளின், அரசு மற்றும் சமய அதிகாரிகளுக்கு, அதிலும் சிறப்பாக, அனைத்து ஜார்ஜிய முதுபெரும் தந்தை 2ம் இலியா, கவ்காசுஸ் பகுதி முஸ்லிம்கள் தலைவர் ஆகியோர்க்கு மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். கடந்த ஜூனில், அர்மேனியாவுக்கு நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்வதாக, இப்பயணம் அமைந்திருந்தது. இதன் வழியாக,  கவ்காசுஸ் பகுதியின் அனைத்து மூன்று நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள கத்தோலிக்கச் சமூகத்தை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, அப்பகுதியின் எல்லா மக்களும் எடுத்துவரும், அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வை நோக்கிய பயணத்தை ஊக்கப்படுத்தவும் விரும்பிய எனது ஆவல் நிறைவேறியது. ஜார்ஜியாவும், அசர்பைஜானும், தொன்மைகால வரலாற்று, கலாச்சார மற்றும் சமய மூலங்களைக் கொண்டிருந்தாலும், அந்நாடுகள் தங்களின் 25வது சுதந்திர தினத்தை இப்போதுதான் சிறப்பித்து இருக்கின்றன. மேலும், அந்நாடுகள், மாபெரும் சவால்களையும் அனுபவித்து வருகின்றன. ஏனைய திருஅவைகள் மற்றும் பிற கிறிஸ்தவ சமூகங்களுடன் ஒன்றித்து, பிற சமயத்தவருடன் உரையாடலில் ஈடுபட்டு, அந்நாடுகளின் மக்களுடன் நெருக்கமாக வாழ்வதற்கு, கத்தோலிக்கத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிறரன்புப் பணிகள், மனித நலத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் வழியாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில், நம் ஒத்துழைப்பு, இயல்பாகவே, ஆர்த்தடாக்ஸ் சகோதர, சகோதரிகளுடன் உள்ளது. நான் அந்நாட்டிற்குச் சென்றபோது, விமான நிலையத்தில் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை வந்திருந்தார். இது ஒரு மிக முக்கியமான அடையாளம். அதோடு, ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமைப் பேராலயத்திற்கு, நான் சென்றது, முதுபெரும் தந்தை அவர்களைச் சந்தித்தது, எனது மனதை மிகவும் தொட்டது. நம் ஒன்றிப்பு, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின், குறிப்பாக, அசீரிய-கல்தேய வழிபாட்டுமுறையின் எண்ணற்ற கிறிஸ்தவ மறைசாட்சிகளின் குருதியில் நோக்கப்படுகிறது. இந்த வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களோடு சேர்ந்து, சிரியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அமைதி நிலவச் செபித்தோம். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அசர்பைஜானில், பல்சமயக்  கூட்டத்தில் கலந்துகொள்ளவும், அங்குள்ள சிறிய கத்தோலிக்க சமூகத்தோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றவும் எனக்கு இயலக்கூடியதாய் இருந்தது. நம் விசுவாச ஒன்றிப்பு, கடவுளில் நம்பிக்கை வைக்கும் எல்லாருடனும், நம் சந்திப்பையும், உரையாடலையும் ஆழப்படுத்தத் தூண்டியது. இதன் வழியாக, நாம் எல்லாரும் இணைந்து, நீதியும், உடன்பிறந்த உணர்வும் அதிகமாகக் கொண்ட ஓர் உலகைச் சமைக்க இயலும். அர்மேனியா, ஜார்ஜியா மற்றும், அசர்பைஜான் நாடுகளை, இறைவன் ஆசீர்வதிப்பாராக. அவர் அந்நாடுகளின் தம் புனித மக்களை வழிநடத்துவாராக.  

இவ்வாறு தன் புதன் பொது மறைக்கல்வி உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில், இரண்டாம் உலகப் போரின் ஆஷ்விஷ் நாத்சி வதைமுகாமில் கைதிகளாக இருந்த சிலரும் கலந்துகொண்டனர். போலந்து மொழி பேசும் பயணிகளை வாழ்த்தியபோது, இந்த முன்னாள் கைதிகளை, சிறப்பான முறையில் குறிப்பிட்டார் திருத்தந்தை. இப்புதனன்று, புனித ஃபவுஸ்தீனா கோவால்ஸ்கா விழாவைச் சிறப்பிக்கிறோம். இப்புனிதர், இறைவன், இரக்கத்தில் செல்வமுடையவர் என்பதை உலகுக்கு நினைவுபடுத்தியவர்   இப்புனிதரின் செய்தியைப் பின்பற்றி, நம்மையும், உலகின் கடினமான பிரச்சனைகளையும் ஆண்டவரிடம் அர்ப்பணிப்போம். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன் என்று சொல்வோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதன் மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, இத்தாலிய நாய் விளையாட்டு அமைப்பினரையும் சந்தித்தார் திருத்தந்தை. பின்னர், அனைவரையும் வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.