2016-10-05 17:26:00

காஷ்மீரில் அமைதிக்காக செபிப்போம் - கர்தினால் கிரேசியஸ்


அக்.05,2016. அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாளையொட்டி, அமைதிக்காக நாம் செபிக்கும் வேளையில், குறிப்பாக, காஷ்மீர் பகுதியில் அமைதி திரும்ப சிறப்பாக செபிப்போம் என்று இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவத்திற்கும், பிரிவினைக் குழுவினருக்கும் இடையே நிலவிவரும் மோதல்கள், இந்திய, பாகிஸ்தான் மோதலாக உருவானால், அது இரு நாட்டு மக்களுக்கும் பெரும் ஆபத்து என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்களும், பரிதாபாத் பேராயர், Kuriakose Bharanikulangara அவர்களும் இணைந்து கூறியுள்ளனர்.

காஷ்மீர் பிரச்சனை, இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஒரு மோதலாக மாறும்போது, இருவரிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதால், மக்களின் பாதுகாப்பு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று பேராயர், Bharanikulangara அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 90 நாட்களாக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில், பொதுமக்களும், இராணுவத்தினரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர் என்றும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், இளையோரின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,  ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.