2016-10-05 16:55:00

இரக்கத்தின் திருப்பணியாளர் தூய பாத்ரே பியோ பாகம் 2


அக்.05,2016. பாத்ரே பியோ அவர்கள், இத்தாலியின் சான் ஜொவான்னி ரொத்தோந்தோ நகரிலுள்ள கப்புச்சின் துறவு இல்லத்தில் வாழ்ந்த காலம் அது. அவர், 1918ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாளன்று, திருப்பலி முடிந்த பிறகு, அருளின் அன்னைமரியா சிற்றாலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு காட்சி. கால்களிலும், கைகளிலும் காயமடைந்த கிறிஸ்து அவர் முன் தோன்றினார். அப்போது இயேசுவிடமிருந்த ஐந்து காயங்களும், இவரின் உடலில் தோன்றி, இரத்தம் வடிய ஆரம்பித்தன. பாத்ரே பியோ அவர்கள், வேதனையால் துடிதுடித்தார். அச்சமயம், இவர் தனது உடலில், இயேசுவின் ஐந்து காயங்களையும் வெளிப்படையாகவே பெற்றார். இக்காயங்கள், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு, அவர் இறக்கும்வரை இருந்தன. இதனால்தான் அவர் எப்போதும் கையுறை அணிந்திருப்பதை புகைப்படங்களில் பார்க்கிறோம். பாத்ரே பியோ அவர்கள், இக்காயங்களைப் பெற்ற பின்னர், மக்கள் எல்லாரும் வியப்புடன் நோக்கினார்கள். பொது மக்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றாதீர்கள் என்று, வத்திக்கானிலிருந்து அறிவிப்பு வந்தாலும், அது விரைவில் திரும்பப் பெறப்பட்டது. இயேசுவின் அந்தக் காட்சி முடிவடைந்தபோது, பாத்ரே பியோ அவர்கள், உடலளவில் மரண வேதனை அனுபவித்தாலும், மனதில் ஆழ்ந்த அமைதியை அனுபவித்தார் என்று அவரின் குறிப்புகள் கூறுகின்றன.

1918ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாளன்று, பாத்ரே பியோ அவர்கள் ஐந்து காய வரம் பெற்றார். இச்செய்தி, 1919ம் ஆண்டின் தொடக்கத்தில், உலகெங்கும் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள், மருத்துவர்கள் உட்பட எண்ணற்ற மக்கள் அவரைப் பரிசோதித்தார்கள். இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருந்தது, மருத்துவத் துறையால் விளக்க முடியாத அற்புதமாக அவை இருந்தன. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின. ஆனால், பாத்ரே பியோ அவர்கள், தனது காயங்கள் பற்றி மருத்துவர்களிடம் விளக்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. உலகினருக்குத் தெரியாமல், கிறிஸ்துவின் பாடுகளின் வேதனையை இவர் அனுபவிக்க விரும்பினாலும், இக்காயங்களை, கடவுளின் கொடையாக ஏற்றார். முதல் உலகப் போருக்குப் பின்னர், தங்கள் வாழ்வை மீண்டும் அமைத்துக் கொள்ளத் தொடங்கிய மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்கு, கடவுள், பாத்ரே பியோ அவர்களைப் பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். பாத்ரே பியோ அவர்களின் காயங்களிலிருந்து வெளிவந்த நறுமணம், அவரின் இறைவாக்கு, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் ஆற்றல் ஆகிய அவரின் ஆன்மீகக் கொடைகள், மக்கள் மத்தியில் கடவுளின் அடையாளமாக இருந்து, அவர்கள் தங்கள் விசுவாசத்தை மீண்டும் பெறுவதற்கு இட்டுச் சென்றன. எனவே, இப்புனிதரால் அவர் வாழ்ந்த நகரமே பரபரப்பானது. திருப்பயணிகளால் நிறைந்தது. இந்தக் காயங்கள் அளித்த வேதனைகள் தவிர, ஆஸ்துமா, சிறுநீரகத்தில் பெரிய கல், அடிக்கடி அடிவயிறு வலி, குடல்புண், வாயுத்தொல்லை போன்றவற்றாலும் துன்புற்றார். ஆனால் இவை எதுவும் அவரின் ஆன்மீகப் பணிகளுக்குத் தடையாக இல்லை.

பாத்ரே பியோ அவர்கள், இரண்டு மணி நேரத்திற்குக் குறைவாகவே உறங்கினார். திருப்பலி நிறைவேற்றுவது, ஒப்புரவு அருளடையாளம் கேட்பது என, ஒவ்வொரு நாளும் 19 மணி நேரங்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றினார். இவர், மக்களை, கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம், பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர். மக்கள் வெள்ளத்தைக் குறைப்பதற்காக, 1922ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து, இவர் நிறைவேற்றும் திருப்பலி நேரங்கள், முன்னறிவிப்பு ஏதுமின்றி மாற்றப்பட்டன. இவர்மீது திருஅவை அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் அவதூறுகளையும் பொருட்படுத்தாது, இவர் தனது திருப்பணிகளைத் தொடர்ந்தார். 1931ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி, இயேசுவின் திருஉடல், திருஇரத்த பெருவிழாவன்று திருப்பலி நிறைவேற்றுவது தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று திருப்பீடம் ஆணையிட்டது. ஆயினும், 1933ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், பாத்ரே பியோ பற்றி தவறான தகவல்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன என்று சொல்லி, அவர்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். 1939ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், மக்கள் பாத்ரே பியோ அவர்களைச் சந்திப்பதை ஊக்கப்படுத்தினார்.

பாத்ரே பியோ அவர்கள், தனது ஆற்றுப்படுத்தலால், பல்வேறு குடும்பங்களில் நிலவிய சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். குடும்பங்களில் சமாதானம் நிலவச் செய்தார். இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களையும், மன அமைதியையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்பி ஓர் இல்லம் தொடங்க நினைத்தார் இவர். தன்னைச் சந்திக்க வந்த மக்களின் உதவியுடன், துன்புறுவோரின் ஆறுதல் இல்லம் என்ற பெயரில், இல்லம் ஒன்றை நிறுவினார். உலக அமைதிக்காகச் செபியுங்கள் என்று, இரண்டாம் உலகப் போரின்போது திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, ஐந்து பேருடன் சேர்ந்து ஒரு செபக் குழுவை ஆரம்பித்தார் பாத்ரே பியோ. இவர் இறந்தபோது அச்செபக் குழுவில் 68 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர் என்று சொல்லப்படுகின்றது.

1960களின் மத்திய பகுதியில், பாத்ரே பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியது. எனினும், இவர் தொடர்ந்து, தினமும் திருப்பலி நிறைவேற்றி, ஒரு நாளைக்கு, ஐம்பது பேருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார். 1968ம் ஆண்டு ஜூலையில் ஏறத்தாழ படுத்த படுக்கையானார். இவருக்கு ஐந்து காய வரம் ஏற்பட்ட ஐம்பதாம் ஆண்டு நிறைவான செப்டம்பர் 20ம் தேதி எல்லாருடனும் சேர்ந்து செபமாலை செபித்து எல்லாரையும் ஆசீர்வதித்தார். செப்டம்பர் 23ம் தேதி, அதிகாலையில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார். தனது துறவற வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்தார். அன்று அதிகாலை 2.30 மணிக்கு அவரின் இறுதி மூச்சை விட்டார். பாத்ரே பியோ அவர்கள் இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.