2016-10-05 17:00:00

இது இரக்கத்தின் காலம் : உழைப்பு உய்வு பெற...


ஒரு காட்டிற்கு இரண்டு நண்பர்கள் ஒன்றாக மரம் வெட்டச் சென்று, மாலையில் ஓரிடத்தில் சேர்ந்து, வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் வீடு திரும்பும்போது, ஒருவரிடம் அதிக விறகுகள் இருந்தன, அதோடு அவர், அதிகம் களைப்படையாமலும் இருந்தார். அதைப் பார்த்த மற்றொருவர், நம்மைப் போலத் தானே இவனும் மரம் வெட்டுகிறான், ஆனால் இவனுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமானது என்று நினைத்தார். அதைத் தன் நண்பனிடமே கேட்டும் விட்டார். நண்பா, இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்க, நண்பனோ, இடைவிடாமல் வெட்டிக்கொண்டே இருந்தேன் என்று பதில் சொன்னார். சிறிதும் ஓய்வு இல்லாமலா நண்பா என்று கேட்க, நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்வேன் என்று சொன்னார் நண்பன். மறுநாள் அவரும் அதேபோல் ஓய்வு எடுத்து மரம் வெட்டினார். ஆயினும், அவரால் நண்பன் அளவுக்கு மரம் வெட்ட முடியவில்லை. அதனால், மறுநாள் மரம் வெட்டும்போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினார் அவர். மறுநாள் மரம் வெட்டப் பிரிந்து சென்றபின், அவர் நண்பனைப் பின்தொடர்ந்து சென்றார், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டிவிட்டு ஓய்வாக அமர்ந்தார். ஆனால் ஓய்வு நேரத்தில் நண்பர், தனது கோடாலியை தீட்டிக் கொண்டிருந்தார். ஆம். புத்தியைத் தீட்டாத எந்த உழைப்பும் உய்வு பெறாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.