2016-10-04 16:45:00

இந்திய அரசு புனித அன்னை தெரேசாவுக்கு மரியாதை


அக்.04,2016. கொல்கத்தா அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டுள்ளதை முன்னிட்டு இடம்பெற்ற பாராட்டு விழாவில், இந்திய, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, புனித அன்னை தெரேசாவின் இரக்கப் பணிகளைப் புகழ்ந்து பேசினர்.

காந்திஜி பிறந்த அக்டோபர் 2ம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கொல்கத்தா நேத்தாஜி அரங்கத்தில் நடந்த விழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய, திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள், புனித தெரேசா, பரிவிரக்கத்தின் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இத்திருப்பலியில், இந்திய துணை அரசுத்தலைவர் முகமது ஹமீது அன்சாரி உட்பட மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள், மேற்கு வங்காள மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் என, பலர் கலந்துகொண்டனர்.

மேலும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய இத்திருப்பலியில், இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், கர்தினால்கள் ஜார்ஜ் அலெஞ்ச்சேரி, டெலஸ்போர் டோப்போ உட்பட 49 ஆயர்கள், 500 அருள்பணியாளர்கள், ஏறக்குறைய ஆயிரம் அருள்சகோதரிகள் மற்றும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பொதுநிலை விசுவாசிகளும் கலந்து கொண்டனர். 

புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையில், தற்போது ஏறக்குறைய 5,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், 139 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.