2016-10-04 16:25:00

இத்தாலி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை


அக்.04,2016. மத்திய இத்தாலியில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு, இச்செவ்வாய் காலையில், முன்னறிவிப்பு ஏதுமின்றி சென்று, அப்பகுதி மக்களை வியப்புகலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய இத்தாலியின் Amatrice, Accumoli, Arquata del Tronto ஆகிய நகரங்களில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இடம்பெற்ற நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்காக, ரியெத்தி மறைமாவட்ட ஆயர் தொமேனிக்கோ பொம்ப்பிலி அவர்களுடன் இச்செவ்வாயன்று காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமாத்திரிச்சே நகரை காலை 9.20 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை, முதலில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘Capranica’ பள்ளிக்குச் சென்று, ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து, அவர்கள், தங்கள் கைகளால் வரைந்த படங்களையும் பெற்றுக்கொண்டார்.

அச்சிறாரை ஒவ்வொருவராக அணைத்து முத்தமிட்டு, அவர்கள் பகிர்ந்துகொண்ட கதைகளையும் கேட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின்னர், அமாத்திரிச்சே நகரில், கடுமையாய்ச் சேதமடைந்துள்ள பகுதியை, அந்நகர் மேயர் Sergio Pirozzi அவர்களுடன் பார்வையிட்டு, அங்கு பல நிமிடங்கள் செபித்தார். 

அமாத்திரிச்சே நகர் மக்களிடம் உரையாடிய திருத்தந்தை, உங்கள் நிலைமைகளில் மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவே நான் இதற்கு முன்னதாக இங்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். அமாத்திரிச்சே நகர் மக்களைச் சந்தித்த பின்னர், அதற்கருகிலுள்ள Accumoli, Arquata del Tronto ஆகிய நகரங்களுக்கும் சென்று, அம்மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ரியெத் மாநிலத்திலுள்ள “San Raffaele Borbona” நலவாழ்வு மையத்தையும் பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் அறுபது நோயாளர்களை, ஒவ்வொருவராக வாழ்த்தி, அவர்களுடன் மதிய உணவும் அருந்தினார் திருத்தந்தை. இவர்களில் பெரும்பாலானோர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இத்திடீர் பயணம் பற்றி அறிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பகம், திருத்தந்தை, கடந்த ஞாயிறன்று, Baku நகரிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தில், இது குறித்துப் பேசியதாகவும், ஓர் அருள்பணியாளராக, ஓர் ஆயராக, ஒரு திருத்தந்தையாக, தான் மட்டும், அங்குச் சென்று, இம்மக்கள்மீது தனக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார் எனவும் கூறியுள்ளது.

அமாத்திரிச்சே நகர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், அந்நகரின் ஏறத்தாழ நான்காயிரம் பேர், அதற்கருகிலுள்ள கூடாரங்களில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.