2016-10-03 16:21:00

இயேசு சபை, 36வது பொதுப் பேரவையின் ஆரம்பத் திருப்பலி


அக்.03,2016. நமது நம்பிக்கை கடுகளவு இருந்தாலும், அதைக்கொண்டு, நினைத்தும் பார்க்க முடியாதவற்றைச் சாதிக்கமுடியும் என்று, புனித தோமினிக் துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Bruno Cadoré அவர்கள், இயேசு சபையினரிடம் கூறினார்.

அகில உலக இயேசு சபையினரின், 36வது பொதுப் பேரவையின் ஆரம்ப நிகழ்வாக, அக்டோபர் 2, இஞ்ஞாயிறு மாலை, உரோம் நகர், Gesù ஆலயத்தில், திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய அருள்பணி Cadoré அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இயேசு சபையின் அகில உலகத் தலைவர் மரணமடைந்தால், அவரது அடக்கத் திருப்பலியை, புனித தோமினிக் சபையின் உலகத் தலைவர் முன்னின்று நடத்தவேண்டும் என்று உருவான ஒரு மரபின் அடிப்படையில், இயேசு சபையின் உலகத் தலைவர், அருள்பணி அதால்ஃபோ நிக்கோலஸ் அவர்கள், தன் பணியைத் துறக்கும் வேளையில், புனித தோமினிக் சபையின் உலகத் தலைவர் இத்திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.

பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் 215 பிரதிநிதிகள், மற்றும், உரோம் நகரில் பணியாற்றும் இயேசு சபையினர் பலரும் கலந்துகொண்ட இத்திருப்பலியில், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று சீடர்கள் இயேசுவிடம் வேண்டிக்கொண்ட வார்த்தைகளை மையப்படுத்தி, அருள்பணி Cadoré அவர்கள் மறையுரை வழங்கினார்.

இயேசு சபையின் மிக உயர்ந்த அதிகாரம் பெற்ற இந்தப் பொதுப் பேரவையில், சவால்கள் நிறைந்த பல பணிகளை, துணிவோடு மேற்கொள்வது குறித்து விவாதிக்கும் அதே வேளையில், பணிவையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என்று அருள்பணி Cadoré அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

'மிக எளிய சபை' என்று, தான் உருவாக்கிய சபையை அழைத்த புனித இஞ்ஞாசியார், "எங்களுக்கு தாராள மனதைக் கற்றுத்தாரும்" என்ற செபத்தின் வழியே, இச்சபையில் பணியாற்றத் தேவையான மனநிலையை விளக்கிக் கூறியுள்ளார் என்று கூறிய புனித தோமினிக் சபையின் உலகத் தலைவர், அருள்பணி Cadoré அவர்கள், இச்செபத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

இத்திருப்பலியைத் தொடர்ந்து, அக்டோபர் 3, இத்திங்கள் காலை, உரோம் நகரின் இயேசு சபைத் தலைமையகத்தில் உள்ள பொதுப் பேரவை அரங்கத்தில் கூடிய பிரதிநிதிகள் முன்னிலையில், தற்போதைய உலகத் தலைவர், நிக்கோலஸ் அவர்கள், பதவி துறப்பதை பிரதிநிதிகள் ஏற்பது, முதல் நிகழ்வாக நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.