2016-10-03 16:11:00

அமைதி நொபெல் விருது, புதிய கர்தினால்கள் குறித்து திருத்தந்தை


அக்.03,2016. போர்களை உருவாக்குவதற்கும், போர்க்கருவிகளை விற்பனை செய்வதற்கும் என்றே பலர் இவ்வுலகில் வாழ்கையில், அமைதியை உருவாக்கவும் பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை, தன் விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 7ம் தேதி, உலக அமைதி நொபெல் விருது அறிவிக்கப்படவிருப்பதையும், தற்போது இவ்விருதுக்கு 300க்கும் அதிகமானோர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதையும் எடுத்துக் கூறிய ஒரு பத்திரிகையாளர், இவ்விருதுக்கு தகுதியானவர் என்று, திருத்தந்தை கருதுவது யார் என்ற கேள்வியை எழுப்பியபோது, அமைதிக்காக உழைக்கும் பல ஆயிரம் நல்ல உள்ளங்களில் யாரைத் தெரிவு செய்வதென்பது கடினமான ஒன்று என்று பதிலளித்தார்.

அமைதி விருது குறித்து எண்ணிப்பார்க்கும்போது, போரினால் உயிரிழக்கும் பல்லாயிரம் குழந்தைகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, குழந்தைகளும், குடிமக்களும் இறக்கும்படி குண்டுகளைப் பயன்படுத்துவது, உண்மையிலேயே கொடிய பாவம் என்று வலியுறுத்தினார்.

மேலும், ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு தான் செல்லக்கூடும் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

கர்தினால்கள் தேர்வு குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், தற்போது கர்தினால்கள் எண்ணிக்கையில் 13 பேர் குறைவாக இருப்பதாகவும், உலகின் அனைத்து கண்டங்களிலிருந்தும் தான் இந்தப் பணிக்கு தகுந்தவர்களைத் தெரிவு செய்யவிருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.