2016-10-02 15:32:00

திருமணத்திற்கு எதிரான உலகப் போர் நடந்துகொண்டிருக்கின்றது


அக்.02,2016. “அமைதியை அடைவதற்கு, அமைதியைத் தவிர, வேறு பாதையே கிடையாது” என்று சொன்னவர் மகாத்மா காந்தி. அக்டோபர் 02, இஞ்ஞாயிறன்று, மகாத்மா காந்தி பிறந்த நாள். இந்நாளில், இந்தியர்கள், தங்களின் தேசத்தந்தையின் சமாதிக்குச் சென்றும், அவரின் படங்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். காந்திஜி கையாண்ட வன்முறையற்ற அஹிம்சா வழியைப் போற்றி, நாடும், உலகமும் அவ்வழியில் செல்லச் செபித்தனர். அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வெள்ளியன்று, ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்குத் தனது மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். இந்த அவரது 16வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், இவ்விரு நாடுகளும் அமைந்துள்ள கவ்காசுஸ் பகுதியிலும், உலகிலும், அமைதி நிலவச் செபித்தார், நம் அனைவரையும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 90 விழுக்காட்டு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களைக் கொண்டிருக்கும் ஜார்ஜியாவில், இரண்டு நாள்கள் பயண நிகழ்வுகளை இச்சனிக்கிழமையன்று நிறைவு செய்த திருத்தந்தை, கிறிஸ்தவத்தைக் கிழித்துப் புண்படுத்தியுள்ள வரலாற்றுப் பிளவுகள், பொறுமை, ஒருவர் ஒருவர்மீது நம்பிக்கை மற்றும் உரையாடல் வழியாக குணப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தையின் தலைமைத்துவம் உட்பட, பல்வேறு விவகாரங்கள் குறித்து, 1054ம் ஆண்டில், மேற்குக்கும் கிழக்குக்கும் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கிறிஸ்தவத்தில் மாபெரும் பிளவு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆர்த்தடாக்ஸ் சபைகள் உருவாகின. இந்தப் பிளவுகள் சரிசெய்யப்பட்டு, கிறிஸ்தவர்கள் இடையே ஒன்றிப்பு ஏற்பட வேண்டும், நாம் எல்லாரும் இயேசு கிறிஸ்துவில் ஒன்றாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஜார்ஜியாவில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் பிளவுகளைச் சரிசெய்ய விரும்பும் திருத்தந்தை, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆன்மீக மையப் பேராலயத்தில், அச்சபையின் தலைவர் முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்களை, அன்புச் சகோதரரே என அழைத்து, தனது எண்ணங்களை முன்வைத்தார். மேலும், திபிலிசி நகரில், இவ்வெள்ளி பிற்பகலில், அருள்பணியாளர்கள், குருத்துவ மாணவர்கள் மற்றும், இருபால் துறவியரைச் சந்தித்த நிகழ்வில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணத்தை அழிக்கும் உலகப் போர், தற்போது உலகில் நடந்துகொண்டிருக்கின்றது. இது ஆயுதங்களால் அல்ல, கருத்தியல்களால் இடம்பெறுகின்றது. திருமணத்தின் பெரிய எதிரி, பாலினக் கோட்பாடு என்றார். கேள்வி பதில் என்ற முறையில் நடந்த இச்சந்திப்பில், குடும்பம், பெண்களுக்குரிய திருஅவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு போன்ற தலைப்புகளில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. கிறிஸ்தவ ஒன்றிப்பு ஒன்றிப்பு முயற்சியில், ஆர்த்தடாக்ஸ் சபையினரை, மதமாற்றும் முயற்சி ஒருபோதும் இடம்பெறக் கூடாது என்றார். கடவுள் படைப்பில் திருமணம் அழகான ஒன்று. இதில் ஏற்படும் பிரச்சனைகள், புரிந்துகொள்ளாமை, சோதனைகள் போன்றவற்றுக்கு, திருமண முறிவு வழியாகத் தீர்வு காண்பதற்கு அடிக்கடி முயற்சிக்கிறோம். ஆனால், திருமண முறிவின் விளைவை அனுபவிப்பது யார்?, குழந்தைகள் மற்றும் இறைவன். பெற்றோர் போடும் சண்டைகளையும், அவர்களின் பிரிவையும் பார்க்கும்போது, குழந்தைகள், இளம் சிறார் எவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, அன்புச் சகோதர, சகோதரிகளே, திருமணத்தைக் காப்பாற்ற உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். பிரச்சனைகள் ஏற்படும் அந்த நாளின் முடிவில், தம்பதியர், தங்களுக்குகிடையே சமாதானத்தை ஏற்படுத்தத் துணிந்தால், இந்நேரம் எத்தனை திருமணங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்! என்றும் திருத்தந்தை கூறினார். வாழ்வின் இருளான நேரங்கள் பற்றியும் பேசினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.