2016-10-02 15:12:00

அசர்பைஜான் குடியரசு, ஒரு கண்ணோட்டம்


அக்.02,2016. அன்பர்களே, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மதங்கள் மத்தியிலும், கிறிஸ்தவ சபைகள் இடையேயும் நல்லுறவுகளை உருவாக்க முயற்சிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அசர்பைஜான் நாட்டிற்கு இஞ்ஞாயிறன்று சென்றார். அசர்பைஜான் குடியரசு என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்நாடு, 1918ம் ஆண்டு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. ஆயினும், 1920ம் ஆண்டில், முன்னாள் சோவியத் யூனியனோடு இது இணைக்கப்பட்டது. பின்னர், 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, அந்த யூனியனிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்து. அதே ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, முழுமையாகப் பிரிந்தது. இந்நாட்டிற்கு, வடக்கே இரஷ்யாவும், வடமேற்கே ஜார்ஜியாவும், துருக்கியும், தெற்கே ஈரானும், மேற்கே அர்மேனியாவும், கிழக்கே காஸ்பியன் கடலும், எல்லைகளாக உள்ளன. தென் கவ்காசுஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டில், எண்ணெய் வளம் அதிகம். இயற்கை வாயுக்கள் மற்றும் வேளாண்மை வழியாகவும் நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது. இந்நாடு, தென்மேற்கு ஆசியாவுக்கும், தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மனித முன்னேற்றக் குறியீட்டில், இந்நாடு உயரிய இடத்தில் உள்ளது. பொருளாதார முன்னேற்றத்திலும், எழுத்தறிவிலும் உயர்ந்துள்ள இந்நாட்டில், வேலைவாய்ப்பின்மை மிகக் குறைவான விகிதத்திலேயே உள்ளது. இந்நாட்டில் 92.2 விழுக்காட்டினர் Azeri இனத்தவர். இங்குப் பேசப்படும் மொழியும் Azeri ஆகும். அசர்பைஜானின் 97 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களில், 88 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். இவர்களில் 62 விழுக்காட்டினர் ஷியைட் பிரிவு முஸ்லிம்கள். இத்தகைய நிலையிலும், அசர்பைஜானில் அதிகாரப்பூர்வ அரசு மதம் என்று, எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்நாட்டில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் 12 விழுக்காடு. கத்தோலிக்கர் 0.01 விழுக்காடே. அதாவது அசர்பைஜானின் 97 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களில், ஏறக்குறைய 700 பேரே கத்தோலிக்கர். இதிலும், உள்நாட்டவர் ஏறக்குறைய 300 பேரே. இப்படி இருந்தபோதிலும், அசர்பைஜானில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த அசர்பைஜான் நாட்டில், இஞ்ஞாயிறன்று, ஒருநாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.