2016-10-02 15:26:00

அசர்பைஜான் குடியரசில் திருத்தந்தை பிரான்சிஸ்


அக்.02,2016. ஜார்ஜியத் தலைநகர் திபிலிசியிலுள்ள திருப்பீடத் தூதரகத்திலிருந்து, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 7.10 மணிக்குக் காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திபிலிசி விமான நிலையம் சென்று அந்நாட்டினருக்கு நன்றி தெரிவித்து, அசர்பைஜான் நாட்டுத் தலைநகர் Bakuவிற்குப் புறப்பட்டார். ஒரு மணி, 20 நிமிடங்கள் கொண்ட இப்பயணத்தில் காலை உணவையும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை. ஜார்ஜியாவில், தனக்கு வழங்கிய நல்வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, ஜார்ஜிய அரசுத்தலைவருக்குத் தந்திச் செய்தியும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். Bakuவின் Heydar Aliyev பன்னாட்டு விமான நிலையம் சென்றிறங்கிய திருத்தந்தையை, அசர்பைஜான் உதவிப் பிரதமர் Yaqub Eyyubov, விமானப் படிகளில் ஏறி, திருத்தந்தையை வரவேற்றார். பிற அரசு அதிகாரிகள், திருப்பீடத் தூதர் என, பல தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். இவ்விடத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அமலமரி ஆலயத்திற்குக் காரில் சென்று, அங்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. பக்கு நகரின் சலேசிய சபையினரின் மையத்திலுள்ள இச்சிறிய ஆலயத்தில், பணிபுரிவது, வாழும் ஒரு கலை என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, இத்திருப்பலியின் இறுதியில், எல்லாருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அதன் பின்னர் ஞாயிறு மூவேளை செப உரையும் ஆற்றி, அப்போஸ்தலிக்க ஆசீர் அளித்தார்.

முன்னாள் சோவியத் யூனியன் அரசு, அசர்பைஜானில் இருந்த ஒரேயொரு கத்தோலிக்க ஆலயத்தையும் 1931ம் ஆண்டில் அழித்தது. அங்கு, கடைசி அருள்பணியாளரும் கொல்லப்பட்ட பின்னர், அந்நாட்டில், 1991ம் ஆண்டுவரை, அருள்பணியாளர்களே இல்லாமல் இருந்தனர். 2002ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்ட பின்னர், 2007ம் ஆண்டில் பக்கு நகரில் சலேசிய சபையினர் இந்தப் புதிய ஆலயத்தை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baku நகரில், இச்சிறிய கத்தோலிக்கர் குழுவை விசுவாசத்தில் ஊக்குவித்த திருத்தந்தை, அவ்வாலயத்திற்கு, வெள்ளியாலான திருப்பலி பாத்திரம் ஒன்றையும் பரிசாக அளித்தார். Baku அப்போஸ்தலிக்க நிர்வாகி அருள்பணி Vladimír Fekete அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இஞ்ஞாயிறன்று, “நம் உள்ளங்களை மாற்றுவதன் வழியாக, இறைவன் இவ்வுலகை மாற்றுகிறார். நம்பிக்கை கொள்ளும் திறந்த உள்ளத்தை இறைவன் காணும்போது, அங்கு, அவரால் புதுமைகள் ஆற்றமுடியும்” என்று, திருத்தந்தை இத்திருப்பலி மறையுரையில் சொன்ன வார்த்தைகளே வெளியாகி இருந்தன. 

Baku நகரில், அமலமரி ஆலயத்தில் நிறைவேற்றிய இத்திருப்பலிக்குப் பின்னர், அந்நகரின் Ganjlik அரசுத்தலைவர் மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அவரை, அரசுத்தலைவர் Ilham Heydar Aliyev அவர்கள் வரவேற்றார். அரசு மரியாதை வரவேற்புகளும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டன. அங்கு, அரசுத்தலைவரைத் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, Baku நகரிலுள்ள, விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவுச் சின்னத்தையும் பார்வையிட்டார். பின்னர், Baku நகரில், Heydar Aliyev மையம் சென்று அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதன்பின்னர், கவ்காசுஸ் பகுதியின் முஸ்லிம்கள் தலைவரை, அந்நகரின் Heydar Aliyev மசூதியில் சந்தித்தார். உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு, அந்நாட்டின் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய நேரம் மாலை 7.30 மணியாகும். Baku நகர் ஆர்த்தடாக்ஸ் சபை ஆயர், யூதமதத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே வாழ்த்தினார் திருத்தந்தை. இதுவே அசர்பைஜான் நாட்டில் நடந்த பத்து மணி நேர திருத்தூதுப் பயணத்தின் கடைசி நிகழ்வாகும்.

அன்பர்களே, பல்சமயத்தவர் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கவும், கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒன்றிப்பை ஊக்குவிக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் வெற்றிபெறச் செபிப்போம். உலகில், குறிப்பாக, போர் இடம்பெறும் பகுதிகளில் அமைதி நிலவ, திருத்தந்தையுடன் இணைந்து நாமும் செபிப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.