2016-10-02 15:24:00

அசர்பைஜான் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


அக்.02,2016. அரசுத் தலைவரே, அதிகாரிகளே, மாண்புமிகு பெரியோரே, நுணுக்கமும், செறிவும் மிகுந்த அசர்பைஜான் நாட்டுக் கலாச்சாரம் கண்டு, வியப்பால் நிறைந்துள்ளேன். பலரது உழைப்பால் உருவானது, இந்நாட்டுக் கலாச்சாரம். இந்நாடு விடுதலை பெற்றதன் 25ம் ஆண்டு நிறைவை அக்டோபர் 18ம் தேதி கொண்டாடவிருக்கிறீர்கள். கடந்துவந்த பாதையை மீண்டும் பார்ப்பதற்கு, இது ஒரு நல்ல தருணம்.

இந்நாட்டின் பல நிறுவனங்களை உறுதிப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை, இப்பாதையில் காணலாம். பன்முகக் கலாச்சாரத்தைப் பேணும் உங்கள் வரலாற்றுப் பாதை, நலிந்தோருக்கு உதவிகள் செய்வது குறித்தும் சிந்திக்க அழைக்கிறது.

பல்வேறு மதங்களின் நம்பிக்கையை ஒருங்கிணைத்துச் செல்வது, இன்றையக் காலக்கட்டத்தின் அவசியத் தேவை. ஒவ்வொரு மதமும் தங்கள் கடவுள் நம்பிக்கையையும், கோட்பாடுகளையும் மட்டுமே வலியுறுத்தி, மற்ற மதங்களை அடக்க முயல்வது, தவிர்க்கப்பட வேண்டும். இதுவரை, அசர்பைஜான் நாட்டில் நிலவிவந்த ஒருங்கிணைப்பும், கூட்டுறவும் இனியும் தொடரும் என்று நம்புகிறேன்.

சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறை வளர்ந்துள்ள நம் காலத்தில், அமைதிக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் தேவை. வன்முறைகளால் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவோரை, பன்னாட்டுச் சமுதாயம் வரவேற்று, புகலிடம் தரும் என்று நம்புகிறேன்.

மிகக் குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட கத்தோலிக்கச் சமுதாயம், இந்நாட்டின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, எதிர்காலச் சவால்களைச் சந்திக்க, அனைவரோடும் இணைந்து செயலாற்றிவருகிறது.

இந்நாட்டில் வாழும் கத்தோலிக்கர், இஸ்லாமியர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், யூதர்கள் ஆகிய அனைவரிடையிலும் நிலவும் நல்லுறவுகள் எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இறைவன் இந்நாட்டிற்கு, நல்லுறவு, அமைதி, வளமான வாழ்வு ஆகிய அனைத்து நலன்களையும் வழங்கி, ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.