2016-09-30 16:19:00

முதுபெரும் தந்தை மாளிகையில் திருத்தந்தையின் உரை


செப்.30,2016. முதுபெரும் தந்தையே, பேராயர்களே, ஆயர்களே, புனிதப் பேரவையின் உறுப்பினர்களே, நாட்டின் பிரதமரே, ஏனையப் பெரியோரே,

ஜார்ஜியா முதுபெரும்தந்தை அவர்கள், வத்திக்கானுக்கு முதல்முறை தந்த வரலாற்று சிறப்பு மிக்க வருகை, இவ்விரு திருஅவைக்களுக்குமிடையே உறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைத்தது.

கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளில் இவ்விரு சபைகளுக்கிடையே அர்த்தமுள்ள உறவுகள் வளர்ந்துவந்துள்ளன. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், நானும் ஒரு திருப்பயணியாகவும், நண்பனாகவும் இந்நாட்டிற்கு வந்துள்ளேன். 2000மாம் ஆண்டு யூபிலி கொண்டாட்டங்கள் நெருங்கிவந்த வேளையில், திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களும், இந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். 3வது மில்லென்னியத்தில் அடியெடுத்து வைக்கவிருந்த கத்தோலிக்கத் திருஅவைக்கு, ஜார்ஜியாவின் பங்களிப்பு என்ன என்பதை, திருத்தந்தை 2ம் ஜான்பால் தன் உரைகளில் குறிப்பிட்டார்.

இரக்கம், ஒற்றுமை, அமைதி இவற்றிற்காகத் தாகம் கொண்டிருக்கும் இவ்வுலகில், இறைவனின் திட்டத்தால், நாம் மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

மீனவர்களான ஆந்திரேயாவும், பேதுருவும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அனைத்தையும் துறந்து, அவரைப் பின்பற்றினர். புனித ஆந்திரேயாவின் படிப்பினைகளால் எழுப்பப்பட்டிருக்கும் ஜார்ஜியா ஆர்த்தடாக்ஸ் சபையும், புனித பேதுருவின் மறைசாட்சியத்தால் எழுப்பப்பட்டிருக்கும் கத்தோலிக்கத் திருஅவையும், தங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் அருளை, இறைவன் இன்று வழங்குகிறார்.

நமது வரலாற்று வேறுபாடுகளையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மறுத்த நிலைகளையும் கடந்து, ஒன்றுபடுவதற்கு, இறைவனின் அன்பு நம்மை அழைக்கிறது.

இறைவனின் அன்பிற்கு, ஜார்ஜியா நாட்டு மக்கள் உன்னத சாட்சிகளாக, பல நூற்றாண்டுகள் வாழ்ந்துள்ளனர். திருத்தூதர்களுக்கு இணையாகக் கருதப்படும் புனித நீனோவின் அயரா உழைப்பால் இந்நாடு நற்செய்தியில் ஊன்றி வளர்ந்துள்ளது.

திராட்சைக்கொடி தண்டிலிருந்து செய்யப்பட்டச் சிலுவை, கிறிஸ்துவின் அடையாளமாக மட்டுமல்லாமல், இந்நாடு, கனிதரும் ஒரு நாடு என்பதையும் குறித்துக் காட்டுகிறது. திராட்சை இரசத்தை உயர்த்திப்பிடித்து, ஜார்ஜியா மக்கள் தங்கள் கொண்டாட்டங்களை நடத்துவதை விரும்புகின்றனர். "ஒரு நண்பனைத் தேடாதவர், தனக்குத்தானே பகையாளியாகிறார்" என்று உங்கள் கவிஞர் நமக்கு நினைவுறுத்துகிறார்.

அமைதி, மன்னிப்பு வழியே நமது உண்மையான பகைவர்களை, அதாவது, இருள்நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடைய சக்திகளை (காண்க. எபேசியர் 6:12) வெல்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்.

தீய சக்தியை அழித்த புனித ஜார்ஜ் போன்று, பலரை இந்நாடு புனிதர்களாகக் கொண்டாடுகிறது. அப்புனிதர்களின் பரிந்துரை, இன்றும் தீய சக்திகளால் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலும், விடுதலையும் வழங்குவதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.