2016-09-30 16:52:00

ஜார்ஜிய அரசுத்தலைவரின் வரவேற்புரை


செப்.30,2016. திருத்தந்தையே, ஜார்ஜியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்கு நன்றி. இந்நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு, வருகிற ஆண்டில் நினைவுகூரப்படுகிறது. மறைசாட்சி, அரசி கேட்டேவான் உட்பட, பல மறைசாட்சிகளைக் கொண்டுள்ள நகரம் திபிசிலி. எங்கள் நாட்டினர், மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே தொடர்ந்து நல்லுறவை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். எங்கள் நாட்டின் 20 விழுக்காட்டுப் பகுதி ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நாட்டின் இராணுவ நடவடிக்கையால், ஜார்ஜியாவின் 15 விழுக்காட்டு மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்நகருக்கு 40 கிலோ மீட்டர் தூரத்தில் முள் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளதால், எம் நாட்டு மக்கள், தங்களின் உறவுகளைச் சந்திக்க இயலாமல் உள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்நகருக்கு 40 கிலோ மீட்டர் தூரத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் உதவி வருகின்றனர். ஜார்ஜிய நாடு, அமைதி, ஒத்துழைப்பு, பொறுமை ஆகிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. திருத்தந்தையே, ஜார்ஜியாவுக்கான தங்கள் பயணம் அமைதிக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாய் அமைந்துள்ளது. இத்திருத்தூதுப் பயணம், ஜார்ஜியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே உறவை வலுப்படுத்துவதுடன், இப்பகுதிக்கு, பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு உறுதியளிக்கின்ற ஒன்றாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு ஜார்ஜிய அரசுத்தலைவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.