2016-09-29 16:14:00

திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் விட்டுச்சென்ற தாக்கம்


செப்.29,2016. புனித பேதுருவின் வழித்தோன்றலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், 33 நாட்களே தலைமைப் பொறுப்பில் இருந்தாலும், அவரது தலைமைப்பணி விட்டுச்சென்ற தாக்கங்கள் இன்னும் தொடர்கின்றன என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கர்தினால் ஆல்பினோ லூச்சியானி அவர்கள், முதலாம் ஜான்பால் என்ற பெயருடன் தலைமைப்பணியைத் துவங்கி, 33 நாட்களுக்குப் பின், 1978ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, இறையடி சேர்ந்ததன் 38வது ஆண்டு நிறைவு, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, அருள்பணியாளர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியாமீனோ ஸ்டெல்லா (Beniamino Stella) அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்குப் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

2ம் வத்திக்கான் சங்கத்தைத் துவக்கவும், நிறைவு செய்யவும் உதவிய இரு திருத்தந்தையருக்கு தான் அளிக்கும் ஒரு மரியாதையாக, ஜான்பால் என்ற இரு பெயர்களை இணைத்து தன் பெயராக தேர்ந்தெடுத்த கர்தினால் லூச்சியானி அவர்கள், இந்தப் புதிய பெயர் தெரிவின் வழியே, இச்சங்கம் உருவாக்கிய உன்னத மாற்றங்களைத் தானும் தொடரப்போவதாக தெளிவுபடுத்தினார் என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையின் தலைவரும் எளிய மனிதரே என்ற உணர்வையும், 2ம் வத்திக்கான் சங்கத்தின் முயற்சியால், கத்தோலிக்கத் திருஅவை இவ்வுலகுடன் மேற்கொண்டுள்ள உரையாடல் தொடரவேண்டும் என்பதையும் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், தன் குறுகிய தலைமைப்பணிக் காலத்தில் சொல்லித்தந்தார் என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இறையடியாராகிய திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களை, அருளாளராகவும், புனிதராகவும் உயர்த்தும் முயற்சிகளில், அருள்பணியாளர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் ஈடுபட்டுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.