2016-09-29 15:23:00

இது இரக்கத்தின் காலம் – பேராசை பேரிழப்பு


அந்த ஊருக்கு வேலை தேடி வந்த கந்தசாமி அவர்கள், அவ்வூர் மக்களை மிகவும் கொடுமைப்படுத்திய பண்ணையாருக்குப் பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார். அந்தப் பண்ணையார், சேவல் சண்டைப் பிரியர் என்பதை அறிந்துகொண்டார் கந்தசாமி. ஊர் மக்களிடம், ஒரு சண்டைச் சேவலையும், இருநூறு ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு, அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் ஒன்று இருந்தது. பண்ணையாரை வணங்கிய அவர், ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது. அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது. நூறு ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது. உங்களால் கிடைத்த பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன் என்றார். பணத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட பண்ணையார், என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்துகொள். மேலும், மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும் என்று பாராட்டினார். அடுத்த வாரம் மீண்டும், அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேருடன், பண்ணையாரிடம் சென்றார் கந்தசாமி. இம்முறையும் அதேபோல் சொல்லி, பணத்தை நீட்டினார். பண்ணையாரும், அந்தப் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அதற்கு அடுத்த வாரம், வேறு நான்கு பேருடன் பண்ணையாரிடம் சென்றார் கந்தசாமி. அப்போது அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை. பண்ணையாரிடம் அவர், ஐயா, நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு ரூபாய் பந்தயம் வைத்தேன். இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் அப்பணத்தைத் தர வேண்டும் என்றார். பண்ணையார் கோபத்துடன் கத்தினார். ஐயா, நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு ரூபாய் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்தப் பணத்தை வாங்குவேன் என்று மிரட்டினார் கந்தசாமி. வேறு வழியில்லாத பண்ணையார், நானூறு ரூபாயை அவர்களிடம் தந்தார். பேராசையால் பேரானந்தம் கண்டிருந்த பண்ணையார் மனதில் மாற்றமும் ஏற்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.