2016-09-29 15:50:00

2017ம் ஆண்டின் சமுதாயத் தொடர்புகள் உலக நாளின் மையக்கருத்து


செப்.29,2016. "'அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்' (எசாயா 43:5) நாம் வாழும் காலத்தில் எதிர்நோக்கையும், நம்பிக்கையையும் எடுத்துக்கூறுதல்" என்பது, 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் சமுதாயத் தொடர்புகள் உலக நாளின் மையக்கருத்தாக, திருப்பீட சமூகத்தொடர்பு அவையால் இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டது.

தலைமை வானத்தூதர்களில் ஒருவரான கபிரியேல், தொடர்புகளின் காவலர் என்று கருதப்படுவதால், அத்தூதரின் திருநாளான, செப்டம்பர் 29ம் தேதி, சமுதாயத் தொடர்புகள் உலக நாளுக்கெனக் குறிக்கப்பட்ட மையக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் உருவாக்கிய சமுதாயத் தொடர்புகள் உலக நாள், 1967ம் ஆண்டு மே 7ம் தேதி ஞாயிறன்று முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.

2017ம் ஆண்டின் சமுதாயத் தொடர்புகள் உலக நாள், தூய ஆவியார் பெருவிழாவுக்கு முந்திய ஞாயிறு, மே 28ம் தேதி, ஆண்டவரின் விண்ணேற்பு விழாவன்று சிறப்பிக்கப்படவுள்ளது. இது, கத்தோலிக்கத் திருஅவையில் கொண்டாடப்படும் 51வது சமுதாயத் தொடர்புகள் உலக நாளாக அமையும்.

சமுதாயத் தொடர்புகள் உலக நாளுக்கென திருத்தந்தை வழங்கும் செய்தி, பத்திரிகையாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதியன்று வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதற்கிடையே, "புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் நாடுவிட்டு நாடு செல்வதால் உருவாகும் பிரச்சனைகளை, நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே தீர்க்க முடியும்" என்ற சொற்கள், திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கடந்த வாரம் நியூ யார்க் நகரில், ஐ.நா.தலைமையகத்தில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து இச்சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.