2016-09-27 16:22:00

திருத்தந்தை - உறுதியான சுற்றுலாவை ஊக்குவிப்போம்


செப்.27,2016. “உள்ளூர் மக்களுடன் சந்திப்பையும், உள்ளூரின் வளர்ச்சியையும் தூண்டுகின்ற மற்றும் எல்லாவிதப் பாகுபாடுகளையும் தவிர்க்கின்ற, உறுதியான சுற்றுலாவை ஊக்குவிப்போம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டவேளை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியும், இத்தினத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 30, வருகிற வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கவிருக்கின்ற, 16வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிய விபரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

84 விழுக்காடு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரைக் கொண்ட ஜார்ஜியா நாட்டுக்கும், 97 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட அஜர்பைஜான் நாட்டுக்கும், மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை, வருகிற வெள்ளியன்று தொடங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 30ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, ஜார்ஜியா சென்றடையும் திருத்தந்தை, அக்டோபர் 2ம் தேதி ஞாயிறன்று அஜர்பைஜான் சென்று, பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, அன்று இரவு பத்து மணியளவில் உரோம் வந்து சேர்வார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.