2016-09-27 16:40:00

கொலம்பிய அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்த ஐ.நா. ஆதரவு


செப்.27,2016. கொலம்பியாவின் கார்த்தஜேனாவில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், பல ஆண்டுகளாக எரிந்துகொண்டிருந்த வன்முறைத் தீப்பந்தகளுக்கு கொலம்பிய மக்கள் பிரியாவிடை கொடுத்துள்ளனர் என்று பாராட்டினார்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வதைப் பார்க்கும்போது, இம்மக்கள் அமைதிக்காக ஏங்கியதைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் கூறிய பான் கி மூன் அவர்கள், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கும், உண்மை மற்றும்  நீதியின் பாதையில் நடப்பதற்கும், இருதரப்பினரும் உறுதி அளித்திருப்பதை வரவேற்றுப் பேசினார்.

இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், கார்த்தஜேனா நகரின் தூய பீட்டர் கிளேவர் ஆலயத்தில் நடைபெற்ற ஒப்புரவு திருப்பலியிலும் கலந்துகொண்டார் பான் கி மூன்.

ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னர், கார்த்தஜேனா துறைமுகத்தில் மனிதமற்ற நிலையில் கொண்டுவரப்பட்ட ஆப்ரிக்க அடிமைகளுக்கு, இயேசு சபை அருள்பணியாளர் தூய பீட்டர் கிளேவர் அவர்கள், உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும், இந்த நிகழ்வில் பேசிய FARC புரட்சிக்குழுத் தலைவர் Timoleon Jimenez அவர்கள், இந்த நீண்டகாலப் போரில் பலியான மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தாங்கள் இழைத்த அத்தனை வேதனைகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறோம் என்று கூறியதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.