செப்.26,2016. மெக்சிகோவில் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும் எனவும், கடந்த வாரத்தில் அந்நாட்டில் கொலைச் செய்யப்பட்ட இரு அருள்பணியாளர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது, தூய பேதுரு வளாகத் திருப்பலியில் கலந்துகொண்ட மக்களிடம் இந்த செபவிண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டில் அருள்பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என செபிப்பதாக உரைத்தார்.
மெக்சிகோவில் குடும்ப வாழ்வுக்கு எதிரான திட்டங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், குடும்பத்திற்கும் வாழ்வுக்கும் ஆதரவாக மெக்சிகோ ஆயர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தன் ஆதரவை வழங்குவதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக செவித்திறனற்றோர் தினத்தைப் பற்றியும் இம்மூவேளை செப உரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவித்திறனற்றோரை வாழ்த்தும் அதேவேளை, அவர்கள் திருஅவைக்கும் சமூகத்திற்கும் வழங்கிவரும் பங்களிப்பையும் ஊக்குவிப்பதாக எடுத்துரைத்தார்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |