2016-09-24 17:19:00

புருண்டி மனித உரிமைகள் குறித்து ஐ.நா. கண்டனம்


செப்.24,2016. புருண்டி நாட்டில் அரசு ஆதரவுத் துருப்புக்களால் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளது, ஐ.நா. அமைப்பு.

கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி முதல், இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, 564 பேர் சட்டத்திற்கு புறம்பாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளனர் என உரைக்கும் ஐ.நா. அறிக்கை, மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்வதாக தன் கவலையை வெளியிட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றமாகக் கருதப்பட்டு, இவை குறித்த அனைத்துலக நீதிபதிகளின் விசாரணை துவக்கப்படும் எனவும் கூறுகிறது, ஐ.நா. அறிக்கை.

ஒருவர் இருமுறைக்கு மேல் அரசுத்தலைவராக பதவி வகிக்கமுடியாது என்ற புருண்டி அரசியலமைப்பையும் மீறி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Pierre Nkurunziza அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அந்நாட்டில், வன்முறைகள் தலைதூக்கிய காரணத்தால்,

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட புருண்டி மக்கள், அண்மை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

ஆதாரம்: Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.