2016-09-24 15:43:00

இது இரக்கத்தின் காலம் – மாற்றங்களை உருவாக்கும் உவமை


30 வயது நிறைந்த ஓர் இளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞரை, பல இசைக்குழுக்கள் தேடிவந்தன. மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.

புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், பல பிரச்சனைகளுக்கு நடுவே, ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருப்பது, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை.

இரக்கத்தின் காலத்தில், உள்ளங்களில் ஒளியேற்றவரும் இவ்வுவமை, நம் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்கும் என்று நம்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.