2016-09-23 16:09:00

வத்திக்கானில் ஊழலற்ற வழிமுறை பின்பற்றப்படும்- பேராயர் காலகர்


செப்.23,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரக்கத்தின் முகம் என்ற அறிக்கையில், இன்றைய சமுதாயத்தின் மீது சாட்டையடியாக விழும் ஊழலை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இவ்வியாழனன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் (Paul Richard Gallagher) அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், ஊழலுக்கெதிராக திருப்பீடம் மேற்கொண்டுள்ள ஒரு முக்கியமான முடிவைக் குறித்து விவரித்துள்ளார்.

ஐ.நா.அவை 2003ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக வெளியிட்ட கொள்கைத் திரட்டில் திருப்பீடம் தன்னையே இணைத்துக் கொள்வதாக, செப்டம்பர் 19, இத்திங்களன்று, நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் முன்னிலையில், பேராயர் காலகர் அவர்கள் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வைக் குறித்து, வத்திக்கான் நாளிதழில் கட்டுரை வெளியிட்டுள்ள பேராயர் காலகர் அவர்கள், திருப்பீடம் மேற்கொள்ளும் அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களிலும் ஐ.நா. அவை வகுத்துள்ள ஒளிவு மறைவற்ற, ஊழலற்ற வழிமுறைகள் பின்பற்றப்படும் என்பதை, திருப்பீடம் இந்த ஒப்பந்தத்தின் வழியே உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

திருப்பீடமும், வத்திக்கான் அரசும் ஊழலின்றி தன் அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது என்றும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் காலகர் அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.